தேடல் தொடங்கியதே..

Saturday 12 October 2013

கீழக்கரையில் மனு கொடுத்த அன்றே 'உடனடி தீர்வு' - விரைந்து நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்திற்கு நன்றி.. நன்றி..!

கீழக்கரை வடக்குத் தெருவில் கொந்தக்கருனை அப்பா தர்ஹா அருகாமையில் உள்ள ஈத்கா தொழுகை திடலில் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த  மின் கம்பிகளை சீரமைக்க கோரி, கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக, நேற்று (11.10.2013) காலை 11 மணியளவில் கீழக்கரை துணை மின் நிலையத்தின் உதவி மின் பொறியாளரை சந்தித்து தகுந்த புகைப்பட ஆதாரங்களுடன் கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது.


இது குறித்து நாம் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரை வடக்குத் தெரு தொழுகை திடலில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் - உடனடியாக சீரமைக்க 'கீழக்கரை நகர் நல இயக்கம்' கோரிக்கை !


இதனையடுத்து மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கையால், அன்றைய தினமே, மாலை 5 மணிக்குள், மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை உயர்த்தி கட்டி, பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். 



இந்நிலையில் கடமையை செவ்வனே செய்யும் வகையில், உடனடி நடவடிக்கை மேற்கொண்ட உதவி மின் பொறியாளர். திரு. பால்ராஜ் அவர்களுக்கு, கீழக்கரை நகர் நல இயக்கத்தினர் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் கீழக்கரை நகரில் உள்ள குறுகிய தெருக்களுக்குள் செல்லும் தாழ்வான மின்சார கம்பிகளை சீரமைக்கவும், 40 வருட பழமையான சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரியும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.  

இந்த சந்திப்பின் போது கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பசீர் அஹமது, பொருளாளர் ஹாஜா அனீஸ், உறுப்பினர்கள் விஜயன், முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

இராமநாதபுரத்தில் 'துரித பட்டா' மாறுதல் சிறப்பு முகாம் - ஒவ்வொரு வியாழக் கிழமையும் நடை பெறுகிறது !

தமிழகம் முழுவதும் நடை பெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், "அம்மா' திட்டம் உள்பட பொதுமக்களுக்கான முகாம்களில், பட்டா மாறுதல் சம்பந்தமாகவே மனுக்கள் அதிகம் வருகின்றன. எனவே, துரித பட்டா மாறுதல் சிறப்பு முகாமை வியாழன்தோறும், ஒவ்வொரு தாலுகாவிலும் நடத்த அரசு உத்தரவிட்டது.



இராமநாதபுரம் தாலுகா அலுவலகம் 

அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவான பட்டா மாறுதல் திட்டத்தின்படி சிறப்பு முகாம்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராம நிர்வாக அலுவலர்களால் பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்படுவதும், ஆயிரக்கணக்கில் இலஞ்சப்பணம் வாரி இறைக்கபடுவதும், இனி பெருமளவு தவிர்க்கப்படும்.

இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து துரிதமாக பட்டா வழங்க ஆவன செய்கின்றனர். பட்டாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், சாதாரண வெள்ளைத் தாளில் பட்டா வேண்டி மனு ஒன்றனை எழுதி, சம்பந்தப்பட்ட மூல பத்திரங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தனியாக எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அரசு உத்தரவுப்படி, ஆவணங்கள் முறையாக இருந்தால்,உட்பிரிவு செய்யப்படாத  முழுமனைக்கு 15 நாட்களிலும், சப்டிவிஷன் செய்யப்பட வேண்டிய மனைக்கு 30 நாட்களுக்குள்ளும் பட்டா மாறுதல், தாலுகா அலுவலகத்திலேயே வழங்கப்படுகிறது. 

ஏற்கனவே பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் பட்டா மாறுதல் கோரி ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும் தற்போது இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கும் பின்னர் அறிவிக்கப்படும் நாளில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்படும். தேதி தொடர்பாக தனியே விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கீழக்கரையில் பட்டா வாங்க வேண்டுமெனில், குறைந்தது ரூ.4000 முதல் ரூ.7000 வரை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இலஞ்சமாக கப்பம் கட்டாமல் வேலை நடப்பதில்லை. பல் நேரம் இலஞ்சம் பெற்றுக் கொள்ளும் இலஞ்சப் பேர்வழிகள், பட்டா பெற்றுக் கொடுக்காமல் பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர்.

ஆகவே கீழக்கரை பகுதி பொதுமக்கள், பணத்தை கொடுத்து விட்டு, அலைந்து திரியாமல், இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒவ்வொரு வியாழக் கிழமையும் நடை பெறும் இந்த நல்ல முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இலஞ்சப் பேர்வழிகளை, லஞ்ச ஒழிப்பில், முறை படி புகார் செய்து, சிறைக்கு அனுப்ப உதவிடுமாறும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் 

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளி  ஜமாத்தை சேர்ந்த சின்னக்கடைத் தெரு மர்ஹூம். ஜனாப்.  A.S அபுதாஹிர் (தாஹிர் ஹார்டுவேர்ஸ்) அவர்களின் மகனாரும், அப்பாஸ் கான், நவாஸ் கான், சலீம் கான், பைரோஸ் கான் ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம். களஞ்சியம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், ஜாவித் களஞ்சியம் அவர்களின் மாமனாரும், தாஹிர் இபுறாஹீம் அவர்களின் தகப்பனாருமாகிய 'A.S முஸ்தபா கான்' அவர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.


 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை சென்னை புரசைவாக்கத்தில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மர்ஹூம். A.S முஸ்தபா கான் அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.



சின்னக்கடைத் தெரு மக்கள் ஊழியர் சங்கத்தின் அறிவிப்பு பலகை  

தொடர்புக்கு : பைரோஸ் கான்  98409 50555

Friday 11 October 2013

கீழக்கரை வடக்குத் தெரு தொழுகை திடலில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் - உடனடியாக சீரமைக்க 'கீழக்கரை நகர் நல இயக்கம்' கோரிக்கை !

கீழக்கரை வடக்குத் தெருவில் கொந்தக்கருனை அப்பா தர்ஹா செல்லும் பாதையில் (மணல் மேட்டிற்கு அருகில்) அமைந்திருக்கும் ஈத்கா தொழுகை திடலில் நோன்புப் பெருநாள்  மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில், வருடம் தோறும் பெருநாள் தொழுகைகள் நடை பெற்று வருகிறது. இங்கு 500 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்தாருடனும் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வர்.  


தலைவரே.. இன்னைக்கு 'பவர் கட்' இருந்ததாலே தப்பிச்சீங்க  

தற்போது இந்த திடலின் மேல்புறம் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள், கை தொடும் தூரத்தில் மிக தாழ்வாக செல்கின்றது. இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர் வரும் 16.10.2013 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகையும் வழக்கம் போல் இங்கு நடை பெற உள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் இந்த மின் கம்பிகளை சரி செய்ய இந்த பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்தனர். 



இந்நிலையில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக, கீழக்கரை துணை மின் நிலையத்தின் உதவி மின் பொறியாளரை சந்தித்து தகுந்த புகைப்பட ஆதாரங்களுடன் கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பசீர் அஹமது, உறுப்பினர்கள் அ.தி.மு.க நகர் செயலாளர் இராஜேந்திரன், முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் உடனிருந்தனர். கோரிக்கை மனுவினை ஏற்ற உதவி மின் பொறியாளர், அதனை உடனடியாக பரிசீலனை செய்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். 


Thursday 10 October 2013

கீழக்கரையில் நாளை (11.10.2013) மின்சாரம் இருக்காது - மின்சார வாரியம் அறிவிப்பு !

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால், கீழக்கரை நகர், ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்தரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த, சுற்று வட்டார பகுதிகளில் நாளை வெள்ளிக் கிழமை (11.10.2013) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று இராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆகவே கீழக்கரை பகுதி பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் வாசிக்கும் இந்த தகவலை,நம் நண்பர்களுக்கும்,சொந்தங்களுக்கும் தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரையில் இந்த வருடம் கூட்டுக் குர்பானியில் 'ஒட்டகங்கள் இல்லை' - ஆடு, மாடுகள் மட்டுமே குர்பானி கொடுக்கப்படுகிறது !

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி, இஸ்லாமிய சட்டப்படி குர்பானி கொடுப்பதற்காக, கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,சார்பில் இராஜஸ்தானிலிருந்து ஒட்டகங்கள் வரவழைக்கப்படும். இதே போன்று கீழக்கரையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்களும், இஸ்லாமிய பெருமக்களும் மூன்று நாட்களுக்கு ஒட்டகம், மாடு, ஆடுகள் குர்பானி கொடுத்து அதன் இறைச்சிகளை, இறை வழியில் முஸ்லீம்களுக்கும், உறவினர்களுக்கும், ஏழை எளியோர்களுக்கும்  வழங்கி மகிழ்வர்.











படங்கள்: கடந்த வருடம் TNTJ சார்பாக வரவழைக்கப்பட்ட குர்பானி ஒட்டகங்கள் 

அதே போல் இந்த ஆண்டும், ஒட்டகங்கள் வரவழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இது வரையில் எந்த அமைப்பினரும் ஒட்டகங்களை கொண்டு வரவில்லை.இது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பினர்களிடம் விசாரித்ததில்,வெகு தொலைவில் இருந்து ஒட்டகங்களை கீழக்கரைக்கு கொண்டு வருவதிலும், அதனை பராமரிப்பதிலும் பெரும் சிரமம் ஏற்படுவதால்,இந்த வருடம் ஒட்டகங்கள் வரவழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இராமநாதபுரத்தில் மட்டும் த.மு.மு.க வினர் சார்பில் குர்பானி கொடுக்க ஒட்டகம் வரவழைக்கப்பட்டுள்ளது.அதே வேளையில் கீழக்கரையில் பல்வேறு சமுதாய அமைப்பினர்கள் கூட்டுக் குர்பானி திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இந்நிலையில் TNTJ, KECT, TMMK உள்ளிட்ட சமுதாய அமைப்புகளின் கூட்டுக் குர்பானி குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை, கீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. கூட்டு குர்பானி குறித்த பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகிறது.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) அறிவிப்பு :













கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) அறிவிப்பு :


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (TMMK) அறிவிப்பு :


இராமநாதபுரத்தில் விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு - சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் 18 ஆம் தேதி நடை பெறுகிறது !

இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ் (டெக்னிக்கல் டிரேட்) பணிக்கான தேர்வு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் வருகிற 18.10.2013 முதல் 23.10.2013 வரை நடைபெறுகிறது. 1.01.1994 முதல் 31.05.1997 ஆகிய தேதிக்குள் பிறந்த திருமணம் ஆகாத இளைஞர்கள் இத்தேர்வு முகாமில் பங்கேற்கலாம். 



மதுரை, சேலம், சென்னை. கோவை, கடலூர், நீலகிரி, திருப்பூர், விழுப்புரம், தேனி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளுர், திருவண்ணாமலை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் காரைக்கால், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் 18.10.2013 அன்று நடைபெறும் முகாமிலும், சிவகங்கை, கன்னியாகுமாரி, விருதுநகர், அரியலூர், கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூர்,இராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 20.10.2013 அன்று நடைபெறும் முகாமிலும் கலந்து கொள்ளவேண்டும்.

கல்வித்தகுதி

இந்த தேர்வில் பங்கு பெறுபவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் அல்லது அதற்கு சமமாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலபாடங்கள் தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் அல்லது மூன்று வருட டிப்ளமோ மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரியூமன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனங்களில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வில் பங்குபெறுபவர்கள் பத்தாம் வகுப்பு, 12–ம் வகுப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றமைக்கான அசல் சான்றிதழ்களையும் மற்றும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் மேலும் அதற்குரிய பள்ளி அல்லது கல்லூரி முதல்வர் சான்றொப்பம் இட்ட நகல்களையும் எடுத்து வரவேண்டும். அசல் சான்றிதழ்களில் மாவட்டத்தின் பெயர் குறிப்பிடவில்லை என்றால் உரிய அங்கீகாரம் பெற்ற டொமிசில் சான்றிதழை சமர்ப்பிக்கவேண்டும். மேலும் எழுத்து தேர்வு நடைபெறுவதால் அதற்கு தேவையான உபகரணங்களையும் எடுத்து வரவேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களின் மூன்று செட் நகல்களை எடுத்து வரவேண்டும்.

வெள்ளைநிற தபால் உறைகளையும், சமீபத்தில் எடுத்து கொண்ட 7 பாஸ்போர்ட் அளவில் 7 வண்ணப் புகைப்படங்களும் எடுத்து வரவேண்டும். மேலும் உடற்தகுதித் தேர்வில் 1.6 கி.மீ. ஓடவேண்டும் என்பதால் அதற்கு தேவையான கால்சட்டைகள் மற்றும் காலணிகளையும் கொண்டு வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் தொலைபேசி 044–22390561, 044–22396565 ஆகிய எண்களிலும், (0)9445299128 என்ற கைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday 9 October 2013

மதுரையில் இருந்து துபாய்க்கு 'நேரடி' விமானம் - நவம்பர் மாத இறுதிக்குள் 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் விமான சேவையை துவங்குகிறது !

மதுரையிலிருந்து துபாய் உட்பட வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்க வேண்டுமென கீழக்கரையை சேர்ந்த துபாய் ETA அஸ்கான் நிர்வாக இயக்குனர் செய்யது சலாஹுத்தீன்,  ETA குழும மனித வளத்துறை செயல் இயக்குனர் M.Y. அக்பர் கான் உள்ளிட்டோர்கள் கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா  நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் தென் மாவட்டத்தினர் பயன் பெரும் வகையில் அடுத்த மாதம் நவம்பர் இறுதிக்குள் மதுரையிலிருந்து துபாய்க்கு சர்வதேச விமான சேவை துவங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் மதுரை விமான இயக்கக ஆலோசனை குழு தலைவருமான மாணிக்க தாகூர் அறிவித்துள்ளார்.



மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு அடுத்தப்படியாக தற்போது துபாய்க்கு விமான சேவை துவங்கயிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான சேவையை 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் மேற்கொள்கிறது. மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த விமானம், துபாய்க்கு அதிகாலை சென்றடைகிறது.

தென் தமிழகத்திலிருந்து துபாய், ஓமன், கத்தார், பஹ்ரைன், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் அதிகமாக இருக்கின்றனர். இங்கு பணிபுரியும்   மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தினர் உட்பட தென் மாவட்டத்தினர் மதுரையிலிருந்து நேரடி விமான சேவை இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.மதுரையிலிருந்து நேரடி விமானம் இயங்கினால், தென் தமிழகம் தொழில் ரீதியான வளர்ச்சி பெறுவதோடு, இராமேஸ்வரம், கொடைக்கானல், குற்றாலம் போன்ற சுற்றுலா தளங்கள் வளர்ச்சி பெறும்.

தென் மாவட்டங்களிலிருந்து துபாய்க்கு ஆண்டுக்கு மூன்று லட்சம் பேர் பயணிக்கின்றனர்.தென் மாவட்டத்தினர் 2 லட்சம் பேர் அங்கு பணிபுரிகின்றனர். மேலும் தென் மாவட்டங்களிலிருந்து, ஒரு வாரத்திற்கு சராசரியாக 1200 பேர் வரை துபாய் செல்கின்றனர். சென்னையிலிருந்து செல்லும் சர்வதேச பயணிகளில் 30 சதவீதம் பேர், தென் மாவட்டத்தினர் ஆவர்.தற்போது திருச்சியிலிருந்து செல்லும் சர்வதேச பயணிகளில் 40 சதவீதம் தென் மாவட்டத்தினராகத் தான் இருக்கின்றனர்.

மதுரையில் இருந்து நேரடி விமான சேவை துவங்கப்பட இருப்பதால், இனி துபாய்க்கு செல்பவர்கள், திருச்சி, திருவனந்தபுரம், சென்னை, கோவை வழியாக செல்ல வேண்டியதில்லை. இதனால் பயணிகளுக்கு செலவும் வெகுவாக குறைகிறது. மேலும் தென் மாவட்டங்களில் விளையும் 1.5 டன் காய்கறிகள், பழங்கள், மல்லிகைப்பூ உள்ளிட்ட பொருள்கள் திருவனந்தபுரம், சென்னை வழியாக கப்பலில் அனுப்பப்படுகிறது. தற்போது நேரடி விமானம் விட்டப்படுவதால், மதுரையிலிருந்தே இவற்றை ஏற்றுமதி செய்ய ஏதுவாகும்.

Tuesday 8 October 2013

கீழக்கரையில் ஆவி பறக்கும் விற்பனையால் திக்கு முக்காடும் 'செட்டி நாடு இட்லி கடை' - கியூ கட்டி நிற்கும் இட்லி பிரியர்கள் !

"நயினார் அண்ணே..! ஒரு நாலு இட்லியும், கட்டிச் சட்னியும், கூட கொஞ்சம் சாம்பாரும் சீக்கிரமா கட்டுங்க" என்று ஒரே நேரத்தில் ஆறு பேர் குரல் கொடுக்கின்றனர். 

கீழக்கரையில் இட்லி என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது..  'செட்டி நாடு இட்லிக் கடை' தான். அதுவும் சமீப வருடங்களில் இட்லிக்கு க்யூ கட்டி காத்திருந்து சாப்பிடுகிற ஒரு உணவகமாக இது மாறி விட்டது. ஒரு பக்கம் சூடு பறக்க பார்சல் சர்வீசும்,மற்றொரு பக்கம் சாப்பிட வந்த வாடிக்கையளர்களுக்கு அன்பான உபசரிப்பும் ஒரே நேரத்தில் நடக்கிறது. இங்கு சமைக்கப்படும் இட்லிக்கு ஒரு தனிப் பதமும், ருசியும் உண்டு என்பதை இங்கு வந்து சாப்பிட்டவர்கள் நன்கறிவர்.



கீழக்கரையில் காலையிலும், இரவிலும் வயிராற, பசியாற, அதுவும் ஆவி பறக்க, சுடச்சுட கிடைக்கிறது என்றால், அது மல்லிகை பூப் போன்ற செட்டி நாடு இட்லிக் கடையின் ஸ்பெஷல் இட்லி தான். கீழக்கரையில் தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு, தள்ளுவண்டியிலும், பிளாட்பாரங்களிலும், இட்லி விற்பனை நடை பெற்றாலும், இங்கு கிடைக்கும்  இந்த இட்லியையும், கமகமக்கும் மணத்துடன் சாம்பாரையும், காத்திருந்து வாங்கி செல்வதையே மக்கள் விரும்புகின்றனர்.

நேரம் : காலை 9:15    இட்லி தீர்ந்து போச்சாம்...







கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் பிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப்பிற்கு எதிரே (நகராட்சி கட்டிடத்திற்கு அருகாமையில்) உள்ள ஒட்டுக் கட்டிடத்தில் கடந்த 47 வருடங்களாக இந்த செட்டியார் இட்லிக் கடை படு பிசியாக இயங்கி வருகிறது. காலம் சென்ற நாகசாமி அவர்கள் உருவாக்கி சென்ற இந்த கடையை அவரது மகன் நயினார் தொடர்ந்து நடத்தி வருகிறார். காலையில் 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் இரவு 10 மணி வரை கடை நடத்துகிறோம். என்று இவர்கள் சொன்னாலும் காலையிலும், இரவிலும் சரியா 9 மணிக்கெல்லாம் இட்லி விற்றுத் தீர்ந்து விடுகிறது.


கீழக்கரையில் பாஸ்ட் புட், பொரித்த சிக்கன், பீப் வகையறாக்களை தின்று சலித்துப் போன இளைஞர்களும், தங்கள் நண்பர்களுடன் இங்கு வந்து இட்லியை சுவைக்க படையெடுக்கின்றனர். மணக்கும் சாம்பாரும், 'சப்பு' கொட்ட வைக்கும் ஸ்பெஷல் சட்டினியும்,  "காம்பினேஷனாக' தரும் செட்டி நாடு இட்லிக் கடையில், அடடா...நாலு இட்லி போதும்... வயிறு நிறைந்து விடும் மொத்த செலவே ரூ.16 க்குள் முடிந்து விடும். 


இந்த செட்டி நாடு இட்லிக் கடையில் இட்லிகளை ஆர்டர் செய்து மொத்தமாக வாங்கிச் செல்வோரும் உண்டு. இந்த பாரம்பரிய கடையின் இட்லி, அறவே புளிப்பு தன்மை இல்லாததால், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், நோய்வாய் பட்டவர்களுக்கும், மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கிறது.

கூடுதல் தகவல் : உலகின் எந்தப் பகுதிக்குச் சென்று கீழக்கரைவாசிகள் குடியேறினாலும், அங்கெல்லாம் இட்லி சட்டியும், இடியாப்ப உரலும், இடியாப்ப தட்டும்  கூடவே பயணிக்கும். அந்த அளவு தங்களது பாரம்பரிய உணவு வகையான இடியாப்பம், மாசி சம்பல், இட்லி, சாம்பார், தோசை, சட்னியை மறப்பதில்லை என்பதை நாமும் மறுப்பதற்கில்லை.

சரி... "நயினார் அண்ணே..!  கட்டிச் சட்னியோட ஒரு நாலு இட்லி பார்சேல்..."

Monday 7 October 2013

கீழக்கரையில் 'புனித ஹஜ்' பெருநாள் அறிவிப்பு !

கீழக்கரை பகுதியில் இஸ்லாமிய பெருமக்களால் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கப்படும்   இந்த வருடத்தின் (ஹிஜ்ரி 1434) தியாகத் திருநாளாம், 'புனித ஹஜ்' பெருநாள் குறித்த அறிவிப்பினை கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி மஹல்லியும், கீழக்கரை டவுன் காஜியுமான காஜி. A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி அவர்கள் வெளியிட்டுள்ளார். 


அன்பிற்கினிய கீழக்கரை வாழ் இஸ்லாமிய பெரு மக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதஹூ. 

கடந்த 06.10.2013 ஞாயிற்றுகிழமை பின்னேரம் திங்கள் இரவு, தமிழகத்தில் துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்).

எனவே தமிழக தலைமை காஜியின் அறிவிப்பின் படி,  கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், எதிர்வரும் 16.10.2013 (புதன் கிழமையன்று) ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படும் என்பதை அனைவருக்கும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்." இவ்வாறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது . 

கீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'கோக்கா அஹ்மது தெரு' சரித்திர பக்கம் (பகுதி - 2)

கீழக்கரை நகரத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பலர் கி.பி. 1890 ஆண்டு காலக்கட்டம் முதலே, பொருளாதாரம் தேடி பர்மா சென்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். இரண்டாம் உலகப்போர் நடை பெற்ற நேரத்தில் பர்மாவில் இருந்த பல கீழக்கரை வாசிகள் போரில் சிக்கி வபாத் ஆகிவிட்டார்கள். அதில் அஹமது தெருவை சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்துள்ளனர்.



அந்த நிலையில் அஹமது தெரு வறுமை நிலையில் இருந்தது. அப்போது மேலதெரு மக்களின் வீடுகளில் அரிசி வசூல் செய்து அதன் மூலம் கிடைத்த தொகையை வைத்து தொழுகை பள்ளிகளை கவனித்து வந்தனர். பிறகு மேலத்தெரு முக்கியஸ்தர்கள் பள்ளிகளை புனரமைப்பு செய்து கவனித்து வந்ததோடு, மாத வருவாயாக பள்ளி ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கி இருக்கிறார்கள். 



கீழக்கரையில் எவ்வித நவீன பயண அமைப்புகளும் இல்லாத காலத்தில் ஏழு தடவை நடை பயணமாகவும், கடல் வழியாகவும் ஹஜ் கடமையை செய்து முடித்தவர் மர்ஹூம். மஹ்மூது மீரா லெப்பை அவர்கள் தான். இவர் கோக்கா அஹ்மது தெருவை சேர்ந்த முஹைதீன் தைக்காவின் ஆரம்ப கால தலைவர்  மர்ஹூம்.'சவலப்பா' அவர்களின் பாட்டனார் ஆவார். 

முஹம்மது மீரா லெப்பை அவர்கள் உயிருடன் இருக்கும் போதே கிரையம் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அன்னாரின் அடக்கஸ்தலம் ஓடைகரை பள்ளிக்கு மேற்கே UHMS கட்டுபாட்டில் இருக்கும் மதரசாவில் இருக்கிறது. இதற்கு வடக்கே ஹபீப் முஹம்மது மரைக்காயர் அடக்கஸ்தலம் உள்ளது.  



இதிலிருந்து அஹமது தெருவாசிகளின் ஆதி ஜமாத் ஓடைகரை பள்ளி என்பதை அறியலாம். அதன் பிறகு கி.பி 1768 ல் (ஹிஜ்ரி 1182) மேலத்தெருவில் புதுப்பள்ளி (கல்லுப்பள்ளியாக) கட்டப்பட்டிருக்கிறது. கால ஓட்டத்தில் சிதைவுற்ற இந்த பள்ளியை, 2002 ல் ஜமாதார்களின் ஏகோபித்த முடிவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு தொழுகை நடந்து வருகிறது.


புதுப் பள்ளியின் பழைய தோற்றம் 

பல வருடங்களுக்கு முன் புதுப்பள்ளியின் அருகில் குளம் ஒன்று அமைந்திருக்கிறது. அதற்கு 'கோக்கா அஹ்மது தெரு குளம்' என்று ஏனைய தெரு வாசிகள் அழைப்பர். மேலத்தெரு முக்கியஸ்தர்கள் ஒரு சிலர், இந்த குளத்தை குத்தகைக்கு பேசி தூர்வார முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அஹமது தெருவாசிகள் சவலப்பா அவர்கள் தலைமையில், அதை தடுத்து நிறுத்தி, 'இந்த இடம் உங்களுக்கு பாத்தியமோ அதிகாரமோ கிடையாது ' என்று கூறி பஞ்சாயத்து செய்து இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் இந்த குளத்தில் தான் குளிக்கவும், தொழுகைக்காக ஒளு செய்யவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்போது இந்த இடம் ஹமிதியா பெண்கள் மேல்நிலை பள்ளியாக மாறி இருக்கிறது. அதன் எதிரே உள்ள மெட்ரிக் பள்ளியும் அதன் இரு பள்ளிகளுக்கு இடையே உள்ள ரோடும் கபர் ஸ்தானாக இருந்திருக்கிறது.

முந்தைய பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும் : (பகுதி 1)



சரித்திர சேகரிப்பில் உதவி : 

சரித்திர ஆர்வலர். நெய்னா முஹம்மது மற்றும் 'A.S.டிரேடர்ஸ்' கஃபார் கான்

                         பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!      தொடரும் >>>>

Sunday 6 October 2013

கீழக்கரையில் மழை வேண்டி இறைவனை இறைஞ்சும் 'பிரார்த்தனை வாசகங்கள்' - சகோதரர். தங்கம் இராதாகிருஷ்ணன் முயற்சி !

கீழக்கரையில் மழை பெய்யாததன் விளைவாக கடும் வறட்சி நிலவி வருகிறது. பள்ளிவாசல்கள் தோறும், மழை வேண்டி இறைவனிடம் கையேந்தி, சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெற்ற வண்ணம் உள்ளது. கடந்த 29.09.2013 அன்று மழை பொழிவை எதிர்நோக்கி, பழைய குத்பா பள்ளி ஜமாஅத் ஏற்பாட்டில் அனைத்து ஜமாஅத்தினரும் பங்கேற்ற சிறப்பு மழைத் தொழுகையும் நடை பெற்றது. 



இந்நிலையில் கீழக்கரை சமூக நல நுகர்வோர் மனித உரிமைகள் இயக்கத்தின் செயலாளர், சமூக நல்லிணக்க சகோதரர் தங்கம் இராதாகிருஷ்ணன் அவர்கள் முயற்சியில் முஸ்லீம் பஜாரில் தங்கம் லேத் முன்னதாக மழை வேண்டி இறைவனை இறைஞ்சும், நபிகளாரின் அழகிய 'பிரார்த்தனை வாசகங்கள்' வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் இந்த வாசகங்களை வாசித்து மழை வேண்டி இறைவனை வேண்டியவாறு கடந்து செல்கின்றனர்.

கீழக்கரையில் 'புதிய வாக்களர் அடையாள அட்டை' பதிவிற்கான சிறப்பு முகாம் !

கீழக்கரையில் தற்போது புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. கீழக்கரையில் 20க்கும் மேற்பட்ட பள்ளி வளாகங்களில், நடை பெறும் இந்த முகாம்களில், அந்தந்த வார்டு பகுதி மக்கள், தாங்கள் வழமையாக வாக்களிக்கும் பள்ளிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். புதிய வாக்காளர் சேர்க்கைக்கு செல்பவர்கள், தங்கள் புகைப்படம், குடும்ப அட்டை நகல், பள்ளி அல்லது கல்லூரியில் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் உள்ளிட்டவற்றை உடன் கொண்டு செல்ல வேண்டும்.


தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இந்த மாதம் 1ம் தேதி வெளியிடப்பட்டது. புதிய பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அக்டோபர் மாதம் 31ம் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை  5 மணி வரை, அந்தந்த வார்டு பகுதிகளில் நடை பெறும் முகாம்களில்  விண்ணப்ப படிவத்தை அளித்து பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம். 

1.1.2014 அன்று 18 வயது நிறைவடையும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதி உடையவர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினத்தன்று அடையாள அட்டைகள் வழங்கப்படும் என தெரிகிறது. வெளிநாட்டில் வசிக்கும் கீழக்கரைவாசிகள் ஊருக்கு வரும் வேளைகளில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில், விண்ணப்பங்களை அளித்தால் அவை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன் லைனிலும் புதிய வாக்களர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான இணைய தளத்திற்கு செல்ல கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.



ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான வழி முறைகள் :