தேடல் தொடங்கியதே..

Saturday 8 June 2013

'கீழக்கரை நகர் நல இயக்கம்' சார்பாக பத்தாம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளில் முதன்மை பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் சிறந்த பள்ளிக்கான விருதுகள் அறிவிப்பு !

கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக மிக அரிது. கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும், கல்வி 'கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு' என்பதையும், காலம் காலமாய் வேதங்கள் வழியாகவும், காப்பியங்கள் வழியாகவும் அறிந்திருக்கிறோம். இஸ்லாம் மார்க்கம், கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் அவசியமான ஒன்று என்பதை மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது. 'சதக்கத்துன் ஜாரியா' என்கிற இந்த நிலையான தர்மத்தை நிலை நாட்டும் பொருட்டு, கல்வி கற்பவர்களுக்கு உதவுவதும், கல்வியை வழங்குவதற்கு முயற்சி செய்வதும், கல்வி கற்பவர்களை ஊக்குவிப்பதும் மிகப் பெரிய நல் அமலாக இருக்கிறது. 


இதையெல்லாம் கருத்தில் கொண்டு கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக, கீழக்கரை நகரில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் முகமாக, இந்த வருடம் முதல் பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில், கீழக்கரை நகரில் முதன்மை பெறும் மாணாக்கர்களுக்கு விருதும், பாராட்டுப் பத்திரமும் வழங்கி கவுரவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழக்கரை நகரில் சிறப்பான முறையில் கல்வி வழங்கி வரும் ஒரு பள்ளிக்கு ஆண்டு தோறும் சிறந்த பள்ளிக்கான விருதும் வழங்க இருக்கிறார்கள்.


பட விளக்கம் : கீழக்கரை முதல்வன் விருதுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்யும் கலந்துரையாடலின் போது, (இடமிருந்து வலமாக) கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். பசீர் அஹமது, தலைவர். செய்யது இபுறாஹீம் மற்றும் உறுப்பினர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுராஹீம் (இரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் - ஓய்வு) அவர்கள் கூறும் போது "ஒரு நாட்டின் மிகச்சிறந்த மனித வளமாக முதுகெலும்பாக,எதிர்கால தூண்களாக நம் இளைய சமுதாயம் திகழ்வதற்கு கல்வி எனபது அத்தியாவசியமாக இருக்கிறது.நம் கீழக்கரை மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வி என்பது, சாதாரணமாக மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கல்வியாக இருக்கக் கூடாது.

இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும் (value Based Education). ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க பள்ளிகளுக்கு அனுப்புவதோடு வீட்டில் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல ‎பண்புள்ள பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பள்ளிகளில் தரமான கல்வி கற்பிப்பதுடன் ‎நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர்களாக நாட்டின் நற்குடிமக்களாக,பெற்றோரைப் பேணுபவர்களாக,சுற்றத்தாரை மதிப்பவர்களாக, அண்டை அயலாருடன் ‎அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முயல் வேண்டும். 

ஆகவே தான் கீழக்கரை நகரில் இந்த வருடம் முதல் சிறந்த பள்ளிக்கான விருதும், பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு, கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக, அடுத்த மாதம் விழா ஒன்று ஏற்பாடு செய்து அதில் விருதுகள் வழங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு முதன்மை விருதுகள் வழங்குவதன் மூலமாக, கீழக்கரை நகரில் உள்ள பள்ளி நிர்வாகத்தினரை மென் மேலும் சிறப்பாக செயல்பட வைக்க முனைவதுடன் மாணவ, மாணவிகளையும் சாதனைகளின் பக்கம் முடுக்கி விட முடியும் என தீர்க்கமாக நம்புகிறோம்." என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Friday 7 June 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு! (பழைய குத்பா பள்ளி ஜமாத்)

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த ஜனாப்.முஹம்மது முஹைதீன் அவர்களின் மனைவியும், மீ.ம.அலி பாட்சா,  மீ.ம.முஹம்மது முஹைதீன் ஆகியோரின் சகோதரியும், ஹுசைன், ஹக் அவர்களின் தாயாரும், நூர் ரஹ்மான், அப்துர் ரஹ்மான், ரிபாய் ரஹ்மான், சீனி சித்தீக் ரஹ்மான், ஹமீது ரஹ்மான், ஹலீம், ஆகியோரின் மாமியும், எனதருமை தோழிமாவுமாகிய 'மீ.ம.முத்து ஆமினா' அவர்கள் நேற்று (06.06.2013) வியாழக்கிழமை ) இரவு வபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்று (07.06.2013) வெள்ளிக் கிழமை  காலை 10.30 மணியளவில் பழைய குத்பா பள்ளி மையவாடியில் நடைபெற்றது. மீ.ம. முத்து ஆமினா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரை சமுதாயப் புரவலர் 'மர்ஹூம். எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்' அவர்களின் 'இம்மையின் இறுதி சந்திப்புகள்' - முதுவை ஹிதாயத் அவர்கள் தரும் உருக்கமான தகவல் !

முனைவர்.செ.மு. ஹமீத் அப்துல் காதர் காக்கா அவர்களின் 'இம்மை உலகின் இறுதி சந்திப்புகள்' குறித்து முதுவை ஹிதாயத் அவர்கள் தன் முகப்புத்தகத்தில் பகிர்ந்து இருக்கும் தகவல்கள் பின் வருமாறு :


முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் முனைவர் செ.மு. ஹமீத் அப்துல் காதர் அவர்கள் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி, நர்சிங், பார்மஸி கல்லூரிகள், உயர்நிலைப்பள்ளி, அறிவியல் படிப்புடன் கூடிய மதரஸா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சமுதாய உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பொருளாளருமான அல்ஹாஜ் முனைவர் செ.மு. ஹமித் அப்துல் காதர் ( வயது 81 ) அவர்கள் அலுவல் நிமித்தமாக புது தில்லி சென்றிருந்த போது 06.06.2013 வியாழக்கிழமை மாலை 6.48 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) 

ஹமித் அப்துல் காதர் காக்கா அவர்கள் எடுத்துக் கொண்ட கடைசிப் புகைப்படம். 




'புது தில்லியில் அல்ஹாஜ் செ.மு. ஹமித் அப்துல் காதர்' இதன் விபரம் வருமாறு : 

அதிகமான சமுதாயக் கல்வி நிறுவனங்கள் இருந்தும் நம் சமுதாயத்திற்கென 'ஒரு மருத்துவக் கல்லூரி இல்லையே..' என்ற ஆதங்கத்தில் 200 படுக்கைகள் கொண்ட ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளார். இம்மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காக மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் திருமிகு கே. ரஹ்மான் கான் அவர்களை சந்திக்க தனது ஆழ்ந்த விருப்பத்தினை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி 05.06.2013 புதன்கிழமை சந்திப்பு நிகழ்வினை எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் ஏற்பாட்டில் மத்திய அமைச்சருடனான சந்திப்பும் சிறப்புடன் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு முன்னேற்பாடாக மருத்துவமனை ஏற்படுத்துவது குறித்து பெருமகிழ்வடைந்தார் அமைச்சர் ரஹ்மான் கான். மருத்துவமனை திறப்பு விழாழ்வில் தான் நிச்சயம் பங்கேற்கிறேன் என்ற உறுதியினையும் அமைச்சர் ரஹ்மான் கான் வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து அப்துல் ரஹ்மான் எம்.பியின் ஏற்பாட்டில் இந்திய துணை ஜனாதிபதி திருமிகு. ஹமீது அன்சாரியினை மரியாதை நிமித்தமாக அல்ஹாஜ். செ.மு. ஹமித் அப்துல் காதர் அவர்கள் சந்தித்தார். அப்போது சமுதாயத்திற்கென மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தினை தெரிவித்தார். துணை ஜனாதிபதி அவர்களும் அதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 



மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் துணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து விட்டு, இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிற அலுவல்களை முடித்து விட்டு 06.06.2013 வியாழன் மாலை சென்னை செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

உடனடியாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்றடைந்ததும் நெஞ்சுவலி அதிகமாகி உயிர் பிரிந்தது. அன்னாரது ஜனாஸா சென்னைக்கு கொண்டு வருவதற்கான பணியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார். வியாழன் நள்ளிரவு அல்லது வெள்ளிக்கிழமை காலை சென்னை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

அன்னாரது மறைவிற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி மற்றும் துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ அனைவ‌ரும் துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். 

குறிப்பு : முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முதலாவது தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசிப் புகைப்படம் : மத்திய அமைச்சர் ரஹ்மான் கான் அவர்களுடன் அல்ஹாஜ் செ.மு. ஹமித் அப்துல் காதர் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படமே.. கடைசிப் புகைப்படம். 

தகவல் : முதுவை ஹிதாயத் அவர்கள்  -- MUDUVAI HIDAYATH

Thursday 6 June 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த கீழக்கரையின் முன்னாள் சேர்மன் முஹம்மது சதக் தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம். S.M.ஜலாலுதீன், மர்ஹூம்.S.M.கபீர், மர்ஹூம்.S.Mதஸ்தகீர் மற்றும் முஹம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளர் S.M.யூசுப் சாஹிப் ஆகியோர்களின் சகோதரருமான, 'சேனா மூனா ஹமீது காக்கா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்' அவர்கள் இன்று (06.06.2013) வியாழக்கிழமை  மாலை 6.48  மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். 


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். 

கீழக்கரை நகர மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அரும் பாடுபட்ட கல்வி தந்தையாகவும், மூத்த கல்வியாளராகவும், கீழக்கரையின் பல்வேறு முன்னேற்ற திட்டங்களுக்கு அடிகோலிய சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார்கள்.

மேலும் முஹம்மது சதக் அறக்கட்டளை நிறுவனரான இவர்கள்,  முஹம்மது சதக் கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், கீழக்கரை அனைத்து ஜமாத்துகளின் கூட்டமைப்பான 'கீழக்கரை குத்பா கமிட்டி' யின் தலைவராகவும் அங்கம் வகித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் 08.06.20013 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரையில் வாரம் தோறும் நடைபெற்று வரும் இலவச மருத்துவ முகாம் - துபாய் ETA குழுமத்தின் 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட் (CWT)' சிறப்பான சாதனை !

துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  ETA  குழுமத்தின் மற்றுமொரு சிறப்பான சேவையாக, இராமநாதபுரம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு துவங்கப்பட்ட  'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' (CWT), ஏழை எளிய மக்களின் ஆரம்ப மருத்துவ உதவிகளை அயராது செய்து வருகிறது. இன்றைய காலக் கட்டத்தில், சாதாரண காய்ச்சல், தலைவலி முதல் உடலில் ஏற்படும் சின்ன சின்ன அசவுகரியங்களுக்காக மருத்துவமனை செல்லும் போது, மருத்துவர் கட்டணம், இரத்தப் பரிசோதனை, மாத்திரை மருந்துகள் என்று குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 காணமல் போய் விடுகிறது.  

இந்த மாதமாவது கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சத்தை, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து விட மாட்டோமா ? என்று ஏங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு,  திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால், அந்த மாதக் கனவும் கானல் நீராகி விடுகிறது. மேலும் கீழக்கரையில் ஆரம்ப சிகிச்சை செலவுகளை கூட செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை மக்கள் ஏராளம் உள்ளனர். இதை எல்லாம் களையும் நல்ல நோக்கோடு, 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' கடந்த ஜனவரி 2013 முதல் துவங்கப்பட்டு,  இன்றைய தேதி வரை இடை விடாது தன் பணியினை செம்மையாக செய்து வருகிறது. இந்த டிரஸ்ட் ETA குழுமத்தின் அக்பர் கான் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. 



இது குறித்து  கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்டின் இராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர். பைசுல் ரஹ்மான் அவர்கள் கூறும் போது "நம் மாவட்டத்தின் ஏழை, எளிய மக்களுக்கு ஆரம்ப மருத்துவ உதவிகளை அளிக்கும் நோக்கத்தோடு இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டு, கடந்த 5 மாத காலமாக தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. கீழக்கரையில் வாரம் தோறும் இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் தெற்குத் தெரு முஸ்லீம் பொது நல சங்க வளாகத்திலும், மற்றொரு வாரம் 500 பிளாட் பகுதியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


இந்த முகாமில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் இலவசமாக, தரமான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.  ஏராளமான ஏழை மக்கள் இதில் பயன் பெற்று செல்வதை காணும் போது உளம் மகிழ்கிறது. அல்ஹம்துலில்லாஹ். எங்கள் அறக்கட்டளையின் மருத்துவக் குழுவை சேர்ந்தவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சென்று தினமும் முகாம்களை நடத்தி சேவையாற்றி   வருகின்றனர். தற்போது அறகட்டளை சார்பாக நம் மாவட்டம் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, பெங்களூரு போன்ற பகுதிகளிலும் இலவச மருத்துவ சேவைகள் சிறப்பாக் நடை பெற்று வருகிறது. கீழக்கரையில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இந்த முகாமை, அனைத்து தரப்பு மக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கீழக்கரை மட்டுமல்லாது நம் மாவட்டம் முழுவதும் தொடர் மருத்துவ சேவை செய்து வரும்  'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' அங்கத்தினர்களுக்கு, எங்கள் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம். 

Tuesday 4 June 2013

கீழக்கரையில் இலேசான சாரல் மழையுடன் வீசும் குளிர் காற்று !

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு மலைத் தொடரை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது கன மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. 



இந்நிலையில் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று 6 மாலை மணி முதல் குளிர்ந்த காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் சாரல் மழை பெய்தது. கடந்த 3 மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கீழக்கரை நகர் எங்கும் குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கீழக்கரை நகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து தொடர் போராட்டம் - கவுன்சிலர் கூட்டிய பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு !

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌த்தில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதனை களையும் நோக்கோடும் பொது மக்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்கும் கலந்தாய்வு கூட்டம் கடந்த 31.05.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை 4.30 ம‌ணிய‌ள‌வில் உசைனியா திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இதில் கீழக்கரை நகரின் பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகளும், சமூக நல அமைப்புகளின் அங்கத்தினர்களும், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.





இதில் சோசியல் டெமாக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) கட்சியின்  மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் கீழக்கரை நகராட்சியின் "19 மாத கால சாதனை கீழக்கரை மக்களின் வேதனை" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் 19 மாத காலத்தில் 7 கோடியே 64 லட்சம்  நிதியில் நடைபெற்ற திட்டப் பணிகள், அதை செய்த ஒப்பந்ததாரர், அவர் செய்த பணி குறித்து ஆய்வு, நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் பேசிய த.மு.மு.க நகர் தலைவர் சிராஜ்தீன் அவர்கள் பேசும் போது "இது போன்ற முறைகேடுகளை நாம் அனுமதிக்க கூடாது. தடுத்து நிறுத்தப்பட வேண்டும்." என்று பேசினார். 

கீழக்கரை SDPI கட்சி நிர்வாகி அப்துல் ஹாதி அவர்கள் பேசும் போது "இதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்திற்கும் ஆதாரம் தந்துள்ளார். இதை வண்மையாக கண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 


கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை (KMT) செயலாளர் இஸ்மாயில் அவர்கள் பேசும் போது "பொது மக்கள் விழிப்புணர்வு பெறாதவரை எதுவும் நடக்கப் போவதில்லை. இங்கு வழங்கப்பட்டிருக்கும் கைஎடையும் சொல்லப்படும் கருத்துகளையும் அத்தனை கீழக்கரை மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று கம்மிய குரலில் வருத்தத்துடன் பேசி முடித்தார். 

கீழக்கரை TNTJ நிர்வாகி ஹாஜா முகைதீன் அவர்கள் பேசும் போது "தேர்தல் வந்தவுடன் அதில் எப்படி முறைகேடுகள் செய்யலாம் என்று கவுன்சிலர்கள் திட்டம் போட்டு விடுகின்றனர். எனவே தேர்தலில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்" என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார். 

கீழக்கரை சமூக ஆர்வலர். சேகு சதக் இபுறாகீம் அவர்கள் பேசும் போது "நம்மில் பலர்.. நம் நகர் நலனை முன்னிட்டும், நகராட்சியின் முறைகேடுகள் குறித்தும் பேஸ் புக்கில் கருத்துகள் பதிவோடோடு சரி.  பெரிதாக எதையோ சாதித்து விட்டதாக மகிழ்கின்றனர். என்றாவது சம்பந்தப்பட்ட துறையினருக்கு இது குறித்து புகார் மனுக்கள் அனுப்பி இருக்கிறீர்களா ? தகவல் அறியும்  உரிமை சட்டம் குறித்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? எதையும் நாம் முறையாக விளங்கி சட்டப் படி அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்." என்று பேசினார். 



கீழக்கரை  SDPI கட்சியின் நிர்வாகி ஆனா. முஜீப் அவர்கள் பேசும் போது "நம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மாயாகுளம் வரை வந்து ஆய்வு செய்து சாலைகள் சரியாக போடவில்லை என பேட்டி கொடுக்கிறார். ஆனால் கீழக்கரை நகருக்குள் இத்தனை பிரச்சனைகள் இருக்கிறது. அப்படியிருந்தும் கண்டு கொள்ள மறுக்கிறார்." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகப் பொருளாளர். முஹம்மது சாலிஹ் ஹுசைன் பேசும் போது "இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக முகைதீன் இபுறாகீம் கூறுகிறார். ஆனால் இங்கு எந்த கவுன்சிலர்களும் பங்கு கொள்ளவில்லை. ஆதலால் 18 வது வார்டு கவுன்சிலர் சுட்டி காட்டும் நகராட்சி குறித்த ஊழல்களில், ஏனைய கவுன்சிலர்களுக்கும் பங்கு இருக்குமோ..? என்று பொதுமக்களாகிய நாம் எண்ணத் தோன்றுகிறது.

கீழக்கரை நகராட்சியில் நடைபெறுவதாக சொல்லப்படும் ஊழல்கள், கமிசன்கள், இலஞ்ச லாவண்யங்கள் அத்தனையும் எப்போது துவங்கியது தெரியுமா..? என்றைக்கு உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்களோ ? அன்றே துவங்கி விட்டது. அன்றைய தினத்திலிருந்தே தங்கள் செலவுக் கணக்கையும், தாங்கள் நகராட்சியில் முதலீடு செய்த கணக்கையும் எழுதத் துவங்கி விட்டார்கள். தாங்கள் செய்த முதலீட்டினை, நல்ல இலாபத்துடன் வட்டியும் முதலுமாக திரும்பப் பெற இன்று வரை உயிரைக் கொடுத்துப் போராடி வருகிறார்கள். என்னுடைய வருத்தம் எல்லாம் முதலீடு செய்வதற்கு நகராட்சி என்ன தொழில் செய்யும் இடமா..? 



இந்த நகராட்சி நிர்வாகம் மூலம் எத்தனையோ அசவுரியங்கள் பொதுமக்களுக்கு இருந்தாலும் கூட சிலவற்றை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

கீழக்கரை நகராட்சிக்கு ஒரு நல்ல பொறுப்பான ஆணையரை, தமிழக அரசு பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் ஆவல் கொண்டிருந்த சமயத்தில், கடந்த ஆண்டு பொறுப்பேற்ற, நகராட்சி  கமிசனர் அவர்கள்  தன் பொறுப்புகளை உணர்ந்து செயல்படாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தமளிக்கிறது. அவர் நகர் நலனில் அக்கறை இல்லாமல் நடந்து கொள்ளும் பொறுப்பற்ற பல பணிகளால், கீழக்கரை நகராட்சியின் வருவாயும், மத்திய மாநில அரசுகளின் நிதிகளும் வீணாகி வருகிறது. 

ஒரு உதாரணத்திற்கு கீழக்கரை நகராட்சிக்கு வாங்கியிருக்கும் கழிவு நீர் உருஞ்சும் (மெகா சக்கர்) வாகனத்தை எதற்காக வாங்கினார்கள் என்று இது வரை யாருக்கும் தெரியவில்லை. நம் கீழக்கரை நகர் மிக குறுகிய தெருக்களையும், சாலைகளையும் கொண்டது. ஆனால் நகராட்சி வாசலில் 'கும்கி யானை' போல் நிற்கும், கீழக்கரை நகரின் எந்த தெருக்குள்ளும் செல்ல முடியாத இந்த பிரமாண்டமான, மிகப் பெரிய உருவில் இருக்கும் இந்த வண்டியினால் என்ன பயன் இருக்கிறது..? 



கமிசனர் அவர்கள் நகர் மன்ற அங்கத்தினர்களுக்கு முறையாக அறிவுரை வழங்கி இருந்தால்,  இந்த மெகா வண்டியை வாங்கியதற்கு பதிலாக, அதே தொகையை வைத்து, கீழக்கரையின் அனைத்து தெருக்களுக்கு உள்ளும் செல்லக் கூடிய இரண்டு சிறிய அளவில் இருக்கும் கழிவு நீர் உருஞ்சும் ( மினி சக்கர் ) வாகனங்களையாவது வாங்கி இருக்கலாம். அதைக் கொண்டு நகரின் பல பகுதிகளில் வாருகால்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டியை பயன்படுத்தும் இடங்களான புதிய கிழக்குத் தெரு, வடக்குத் தெரு சங்கு மால் சந்து போன்ற இடங்களில், நகராட்சி ஒரு சிறு தொகையை பெற்றுக் கொண்டு சேவை புரிந்து இருக்கலாம். இதனால் நகராட்சிக்கு ஓரளவு வருமானமும் கிடைத்திருக்கும்.

அதே போல கீழக்கரை புதிய நகர் மன்றம் பொறுப்பேற்று முதன் முதலாக வந்த அரசு நிதியான  ரூ .2 கோடியில் ரூ. 50 இலட்சம் கழிவு நீர் வடிகால்கள் அமைக்க ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுத்த துணை சேர்மன் ஹாஜா முஹைதீன் அவர்களின் நண்பர் திரு. வெள்ளைசாமி எடுத்து பணியை துவங்கினார். என்ன காரணத்தினாலோ பணிகள் பாதியிலேயே விடப்பட்டு இருக்கிறது. தற்போது கீழக்கரையில் குப்பை பிரச்சனைகள் ஓரளவுக்கு மட்டுப்பட்டு இருக்கும் சூழலில் சாக்கடை பிரச்சனைகள் பெரும் தலை வலியாக உருவெடுத்துள்ளது. ஆனால் திரு. வெள்ளை சாமிக்கு அவர் வேலை பார்த்த வரை உள்ள அனைத்து தொகைகளும் (ரூ.1800000)  வழங்கப்பட்டு விட்டது. 

நம் வீடுகளில் சாதாரண கொத்தனார் வேலைகள் நடந்தால் கூட, அவர்களுக்கு பேசிய தொகையில் சிறிதளவை வேலை முடியும் வரை பிடித்து வைத்துக் கொள்வோம். அந்த சிறிய நடை முறை கூட நகராட்சி நிர்வாகத்தினருக்கு ஏன் தெரியாமல் போனது ? துணை சேர்மன் அவர்கள் ஆதரவோடு ரூ.5 இலட்சத்திற்கு வாருகால் மூடி போட பணி ஆணை வழங்கப்பட்டது. இங்கு வந்திருக்கும் பொது மக்களே.. சொல்லுங்கள். உங்கள் தெருக்களில் உள்ள வாருகால்களுக்கு மூடி போடப்பட்டு விட்டதா ? வாருகால்களுக்கு மூடி போட ஒன்றரை வருட காலமா.. சொல்லுங்கள்.

இனி வரும் காலங்களில் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் வரவு செலவுக் கணக்குகள் அத்தனையும் நமது ஊரின் அத்தனை அமைப்புகளின் சங்கங்களின் கோப்புகளில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் தகவல் அறியும் உரிமைகள் சட்டம் 2005 ன் கீழ் அனைவரும் ஆக்கப்பூர்வ கேளவிகளை கேட்பதன் மூலம் அவற்றை பெற்று தவறுகள் நடை பெற்று இருப்பின் சட்ட நடவைக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் பணிகளை சரி வர செய்யாத ஒப்பந்ததாரர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, சட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் அவர்களை நம் ஊரிலிருந்து ஓட ஓட அடித்து விரட்ட வேண்டும்.  

இனி வரும் காலங்களிலாவது கவுன்சிலர்கள் இலஞ்சத்தை தவிர்த்து, நெஞ்சத்தை நிமிர்த்த வேண்டும். இங்கு வராத வார்டு கவுன்சிலர்களின் கவனத்திற்கு இங்கு பேசப்படும் செய்திகளை, இங்கு வந்திருக்கும் அந்தந்த வார்டு பெருமக்கள் கொண்டு சேருங்கள். அதனையும் விடுத்து அவர்கள் இன்னும் கமிசன்களை தொடர்ச்சியாக பெறுவார்களாயின், அடுத்த உள்ளாட்சி தேர்தலில் இதே வார்டு கவுன்சிலர்கள் போட்டியிட்டால், பொது மக்களாகிய நாம் இவர்களை செருப்பால் அடிப்பதை தவிர வேறு வழியில்லை" இவ்வாறு பேசினார். 



மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி இர்பான் அவர்கள் பேசும் போது "இனி வரும் காலம் பொது மக்களின் கைகளில் தான் உள்ளது. அவர்கள் விழிப்புடன் இல்லாமல் ஒன்றும் நடக்காது."என்று தெரிவித்தார். 

இந்த கூட்டத்தின் முடிவில் தலைமை வகித்த அப்துல் ஹமீது பேசும் போது "கீழக்கரையில் இந்த 19 மாத காலத்தில் 7 கோடிக்கு மேல் பெறப்பட்ட நிதியில் எந்த பணியும் நல்ல முறையில் நடைபெற்றிருப்பதாக தெரியவில்லை. அனைத்திலும் முறைகேடு நடந்துருப்பதாக அறிகிறேன். இதனை கண்டிக்கும் வகையில் பொது மக்களை திரட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக விரைவில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்தார். கவுன்சிலர் முகைதீன் இப்ராஹிம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையம் அமைக்க நகராட்சி சார்பாக எடுக்கப்பட்ட தொடர் முயற்சிகளுக்கு பலன் இன்னும் 15 நாள்களில் கிடைக்கும் - கீழக்கரை சேர்மன் அறிவிப்பு !

கீழக்கரை நகரில் ஊருக்கு வெளியே உள்ள மின்சார கட்டண வசூல் மையத்தை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் கீழக்கரை நகர் சோஷியல் டெமொக்ரெடிக் பார்ட்டி (SDPI) கட்சியினர் கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையத்தை நடைமுறைபடுத்தாமல் நாடகமாடும் நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மின்சார வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 




இது குறித்து கீழக்கரை நகராட்சி சேர்மன் ஜனாபா. இராவியத்துல் கதரியா அவர்கள் கூறும் போது "நான் பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமான 'ஊருக்குள் மின் கட்டண வசூல் மையம்' சம்பந்தமாக இது வரை நகராட்சி சார்பாக பல்வேறு ஆக்கப்பூர்வ முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிரதி பலனாக கடந்த மார்ச் மாதம் மின்சார வாரிய செயற் பொறியாளரிடம் இருந்தும், மின் பகிர்மான நுகர்வோர் குறை தீர்க்கும் மன்ற தலைவரிடம் இருந்தும், எங்கள் கோரிக்கைகளுக்கான பதில் மனு பெறப்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தின் பதில் கடிதம் 

அந்த பதில் கடிதத்தில் புதிய பேருந்து நிலையத்தில் மின் கட்டண வசூல் மையம் அமைக்க ஒப்புதல் அளித்ததோடு, விரைவில் அதற்கான பணிகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அது நாள் முதல் தொலைப்பேசி வாயிலாகவும், நேரடியாகவும் பணிகளை விரைந்து துவங்கக் கோரி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். இறைவன் நாடினால் இன்னும் 15 நாள்களில் வசூல மையம் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கிறேன். அதற்குள் இந்த போஸ்டர் SDPI கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் 18 வது கவுன்சிலரின் குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை" என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தின் பதில் கடிதம் 

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட தலைமை மின்சார வாரிய பொறிஞர். ரா.அசோக் குமார் அவர்களை நேரடியாக் சந்தித்து கேட்ட போது "தற்போது நிலவும் பணியாளர்கள் பற்றாக் குறைவால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வசூல் மையம் நகருக்குள் அமைய நகராட்சி சேர்மன் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.  புதிய பேருந்து நிலையத்தில் வசூல் மையம் அமைக்கவும், புதிய தெரு விளக்குகள் அமைக்கவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.  

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி :

கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையத்தை நடைமுறை படுத்தாமல் நாடகமாடும் நகராட்சி நிர்வாகத்தினர், மின்சார வாரியத்திற்கு SDPI கட்சியினர் சுவரொட்டிகள் மூலம் கண்டனம் !

http://keelaiilayyavan.blogspot.in/2013/06/sdpi.html

 
FACE BOOK COMMENTS :

Like ·  ·  · Share · Edit

Monday 3 June 2013

கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையத்தை நடைமுறை படுத்தாமல் நாடகமாடும் நகராட்சி நிர்வாகத்தினர், மின்சார வாரியத்திற்கு SDPI கட்சியினர் சுவரொட்டிகள் மூலம் கண்டனம் !

கீழக்கரையில் தற்போது மின்சார கட்டண வசூல் மையம், நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ்சாலையில் வண்ணாந்துறை அருகே செயல்பட்டு வருகிறது. அதனை ஊருக்குள் கொண்டு வர கீழக்கரையின் பல்வேறு சமூக நல அமைப்பினர்களும், அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பொதுநல வாதிகளும்  பெரு முயற்சி எடுத்து வந்தனர்.



இந்த தொடர் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த நகராட்சி நிர்வாகத்தினர், புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்கள் நலன் கருதி மின்சார கட்டணம் கட்டும் அலுவலகம் செயல்படுத்த ஏற்கனவே இருந்த ஒரு அறையை புதுப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்து விட்டது. "இதற்கு வழங்கப்பட்ட தொகை ரூ. 1,97,812 ஆகும். ஆனால் செய்யப்பட்ட வேலைகள் ரூ. 50000 (ஐம்பதாயிரம்) கூட இருக்காது" என்று கவுன்சிலர் M.U.V.முகைதீன் இப்ராகீம் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார்.

இதில் வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால், புதிய பேருந்து நிலையத்தில், கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தும், மின்சார கட்டணம் செலுத்தும் அலுவலகம் இன்றைய தேதி வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் கீழக்கரை நகர் சோஷியல் டெமொக்ரெடிக் பார்ட்டி (SDPI) கட்சியினர் கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையத்தை நடைமுறைபடுத்தாமல் நாடகமாடும் நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மின்சார வாரியத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். 

குறிப்பு: கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் புதியதாக பொறுப்பேற்ற நகர் மன்ற அங்கத்தினர்களின் முத‌ல் கூட்ட‌த்தில், முதன்மை  தீர்மானமாக, கீழக்கரை நகருக்குள் மின்சார கட்டணம் செலுத்தும் மையத்தை கொண்டு வர வேண்டும் என்பதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அரசியல் இலாபங்களுக்காக கிடப்பில் போடப்பட்டு இருக்கும் இந்த மின்சார வசூல் மையத்தை துரிதமாக நடைமுறைபடுத்த வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு பொது மக்களின் விருப்பமாக இருக்கிறது.

Sunday 2 June 2013

குற்றாலத்தில் துவங்கிய சாரல் மழையால் ஆர்ப்பரிக்கும் அருவிகள் - குற்றாலம் நோக்கி படையெடுக்கும் கீழக்கரைவாசிகள் !

'ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும். இந்த சமயத்தில் தென் மேற்கு பருவ மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இக்காலங்களில் குற்றால அருவிகளில் விழும் மூலிகை கலந்த இந்த தண்ணீரில் குளித்து மகிழவும், நோய் பிணியை அகற்றி செல்லவும் குற்றாலம் நோக்கி நம் கீழக்கரைவாசிகள் மட்டுமின்றி பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். 



தற்போது குற்றாலத்தில் குளு, குளு காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் அருமையாக விழத்  தொடங்கி உள்ளது. இந்நிலையில் கீழக்கரையில் நேற்று முன் தினம் இரவு குளிர்ந்த காற்றுடன் லேசான சாரல் தூறியது. குற்றாலம் சீசன் காலங்களில் கீழக்கரையிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பள்ளிகளின் கோடை விடுமுறை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்திருப்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் குற்றாலம் நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆண்டு தோறும் சீசன் தொடங்குவதற்கு அறிகுறியாக மே மாத இறுதியிலேயே குற்றாலம் பகுதியில் தென்றல் காற்று வீச தொடங்கி விடும். இதற்கிடையே கேரளாவில் தென் மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி விட்டதால் குற்றாலம் மலை பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மாலை முதல் இதமான சூழல் நிலவுகிறது. 'கத்திரி வெயில்' எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்து விட்ட நிலையில் நேற்று முதல் கேரளாவில் மழை பெய்யத் தொடங்கி தொடங்கியுள்ளதாலும், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதாலும் குற்றாலம் சீசன் விரைவில் தொடங்கும் குளுகுளு சூழல் உருவாகியுள்ளது. 



இதனால் அங்கு பருவ மழை தொடங்கியிருப்பதாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மெயினருவி மற்றும்  ஐந்தருவியில் 4 பிரிவுகளில் அமோகமாக தண்ணீர் விழுகிறது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. இது சீசன் துவங்குவதற்கான அறிகுறி எனவும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் குறித்த காலத்தில் சீசன் தொடங்கி விடும் எனவும் தெரிய வருகிறது.

குற்றாலம் சீசன் குறித்து நாம் சென்ற ஆண்டு வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

குற்றாலத்தில் சாரல் மழையுடன் களை கட்டும் சீசன் - கீழக்கரைவாசிகள் மகிழ்ச்சி !

என்ன நண்பர்களே.. நாமும் குற்றாலத்திற்கு ஒரு விசிட் அடிப்போமா..?

கீழக்கரையில் 'மக்கள் சேவை அறக்கட்டளை' சார்பாக நடைபெற இருக்கும் கல்வி உதவிகள் வழங்கும் விழா - வருடம் தோறும் தொடரும் சிறப்பான முயற்சி !

கீழக்கரை நகரில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் சேவை அறக்கட்டளை சார்பாக கல்விக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கீழக்கரை பகுதியில் ஆரம்பக் கல்வியைக் கூட துவங்க முடியாமல் தவிக்கும், அனைத்து சமுதாய ஏழை எளிய பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகவும், உயர் நிலை மற்றும் கல்லூரிப் படிப்பிற்கான கல்வி உதவிகளையும், இந்த அறக்கட்டளையினர் தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வருடத்திற்கான கல்வி உதவிகள் வழங்கும் விழா எதிர் வரும் (05.06.2013) புதன் கிழமையன்று மாலை 4.30 மணியளவில், மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் அருகில் உள்ள முஸ்தபா மரைக்காயர் தோட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, இராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.காத்தலிங்கன் அவர்கள் கலந்து கொள்கிறார். 

இது குறித்து மக்கள் சேவை அறக்கட்டளையின் நிறுவனர் M.K.E உமர் அவர்கள் கூறும் போது "எல்லாப் புகழும் இறைவனுக்கே.. இறைவன் அருளால் கீழக்கரையில் கல்வி, மருத்துவம், ஏழை எளியோர்களின் கடன்களை செலுத்த உதவி புரிதல், தையல் மிஷின் போன்ற தொழில்  கருவிகளை வழங்குதல், நோன்பு காலங்களில் ஜகாத்து, அரிசி உடை வழங்குதல், ஏழை மக்களுக்கு கழிவறைகள் எடுத்து தருதல், கிணறுகள் வெட்டித் தருதல், ஏழை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி, சீருடை, புத்தகம், கல்லூரிக் கட்டணம் போன்றவைகளை வழங்குதல் போன்ற சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இறைவன் நாடினால் இந்த வருடமும், 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவிகளை வழங்கக் காத்திருக்கிறோம்.  ஜனவரி முதல் டிசம்பர் வரை எங்கள் சேவைகள் இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த கல்வியாண்டுக்கான கல்வி உதவிகள் தேவைப்படுவோர் ஏப்ரல் மாத துவக்கத்திலேயே அதற்கான உதவித் தொகை அட்டையை எங்களிடம் பெற்று விண்ணப்பிக்கலாம். இது தவிர கீழக்கரையில் உள்ள விதவைகள் மற்றும் முதியோர்களுக்கான உதவித் தொகை மாதம் தோறும் 250 க்கும் மேற்பட்டோர்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது" என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அறக்கட்டளை நிர்வாகிகள் 

கீழக்கரை நகரில் ஆண்டு முழுவதும் சிறப்பாக செயலாற்றி வரும் இந்த மக்கள் சேவை அறக்கட்டளையினரின் பணிகள் மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறோம். 

கல்வி, மருத்துவம், தொழில் உதவி போன்றவைகள் பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைப் பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி  :
98400 51577 / Email : omerwest@hotmail.com 

FACE BOOK COMMENTS :

Like ·  ·  · Share · Edit
  • Ramish Khan நம் வாழ்த்துக்களை பகிர்வோம்
    5 hours ago · Unlike · 2
  • Mohamed Salihan கல்வி உதவி கீழக்கரை மாணவர்களுக்கு மட்டுமா அல்லது வெளியூர் மாணவர்களுக்குமா?
    4 hours ago · Like · 1
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நம் கீழக்கரையில் கல்வி உதவிகள் கிடைக்காமல் ஏராளமான ஆர்வமுள்ள மாணவ செல்வங்கள் படிப்பை பாதியிலேயே விட்டு விடுகின்றனர். அது போன்ற ஏழை மாணவ, மாணவியர்களை இனம் கண்டு, இடைவிடாது சேவையாற்றும் தம்பி உமர் அவர்களுக்கும் அவர் சார்ந்த அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் கிருபை குறைவில்லாமல் கிடைக்க துவா செய்கிறேன். ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
  • Riffan Zyed i THINK THIS EDUCATIONAL HELPS R ONLY FOR KEELAKARAI STUDENTS. I REQUEST THE TRUST MEMBERS WOULD EXTEND THIS HELPS TO KILAKAKARAI SURROUNDING RURAL PEOPLE ALSO. THANKS
    4 minutes ago · Like · 1