தேடல் தொடங்கியதே..

Friday 2 August 2013

கீழக்கரை 'இஸ்லாமி பைத்துல் மால்' ஆற்றி வரும் அளப்பரிய சேவைகள் - அறம் செய அழகிய வழி !

முஸ்லீம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக ‘பைத்துல் மால்' காணப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே ‘பைத்துல் மால்' ஆகும். ‘பைத்துல் மால்'  என்ற சொல் பிரயோகம் முதன் முதலில், முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது.

தற்காலத்தில் மனிதனுடைய பொருளாதாரத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. திடீரென அவனுக்கு ஏற்படும் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருளாதார வசதி இல்லாத போது, அவன் வட்டிக் கடைகளை நாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றான். எனவே அவனை வட்டி என்ற வன்கொடுமையில் இருந்து விடுவிப்பதற்கு பைத்துல் மால் போன்ற நிறுவனங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.

அறம் (தர்மம், ஜக்காத்) செய்வது இஸ்லாமிய கடமைகளின் ஒன்று. அதனை செம்மையாக நிறைவேற்றும் முகமாகவும், மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான நிதியுதவிகளை வழங்குதல், நோயாளிகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுதல், அநாதைக் குழந்தைகளைப் பராமரித்தல், 

திருமண வயதையும் தாண்டி திருமணம் முடிக்க வசதியற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு உதவுதல், விதவைகள், முதியவர்களுக்கான உதவிகள் போன்ற பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கு பைத்துல்மால் போன்ற சமூக நிறுவனங்கள் கட்டாயம் அவசியமாகிறது. 

இது போன்ற நல்ல நோக்கத்திற்காக, சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளர்களால், கீழக்கரையில் கடந்த 1986 ஆம் ஆண்டு பைத்துல் மால் உருவாக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு பைத்துல் மாலின் நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 1990 ஆம் வருடம் பண்பாளர். B.S.A.அப்துல் ரஹ்மான் அவர்களால், பிரபுக்கள் தெரு பகுதியில் திறப்பு விழா கண்டது. 


தற்போது 185 புரவலர்களுடன், 420 நிர்வாக அங்கத்தினர்களுடன் சிறப்பாக செயலாற்றி வரும் கீழக்கரை பைத்துல்மாலின்  திட்டங்களுக்கான நிதியை நேரடியாக பைத்துல் மாலுக்கு அளிக்க வேண்டி பொது நல ஆர்வலர் சகோதரர். குத்புதீன் ராஜா அவர்கள் சென்ற ஆண்டு வெளியிட்டிருந்த கோரிக்கை பின் வருமாறு :

"கீழக்கரை பைத்துல்மால் தனது செயல் திட்டங்களில் "வட்டியில்லா கடன்" திட்டத்தில் ஒவ்வொறு மாதமும் சராசரி ரூபாய் 2.60,000 வரை கடன் உதவி வழங்கி வருகிறது.  

ஆனால் கடன் கேட்டு வருபவர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டு மென்றால் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 4,00,000 (நான்கு லட்சம்) வரை தேவைப்படுகிறது. 

போதிய நிதி இல்லாமையின் காரணத்தால் அனைவருக்கும் உதவி வழங்க முடியாத நிலையில் உள்ளது.
இந்த குறைபாட்டை நீக்க நிரந்தர பலன் அளிக்கும் நிதியமைத்தல் (ENDOWMENT) திட்டத்தை பைத்துல்மால் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் நமதூரைச் சார்ந்த பலர் தனது முன்னோர்கள் உறவினர்கள் பெயரால் ரூ 5,000 முதல், ரூ 2,00,000 வரை நிதி வழங்கியுள்ளார்கள். 

இம்மகத்தான பணிக்கு சகோதர சகோதரிகள் தங்கள் முன்னோர்கள் உறவினர்கள் பெயரால் என்டோமெண்ட் நிதி வழங்க முன் வந்தால் கடன் உதவி கேட்டு வரும் எல்லோருடைய தேவைகளையும் இன்ஷா அல்லாஹ் பூர்த்தி செய்ய இயலும்.

குறிப்பு : உயர் கல்வி கடன் மட்டும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 

நீங்கள் கீழக்கரை பைத்துல்மாலுக்கு உங்கள் முன்னோர்கள் பெயரில் கொடுக்கும் பணம் என்டோமெண்ட் நிதியில் நிரந்தர வைப்பு நிதியாக சேர்க்கப்பட்டு, கடன் கேட்டு வருபவர்களுக்கு கொடுக்குப்படுகிறது. கடன் வாங்கியவர்கள் திருப்பி அளித்தவுடன் மீண்டும் என்டோமெண்ட் நிதியில் சேர்க்கப்பட்டு பிறகு இன்னொருவருக்கு கொடுக்கப்படுகிறது. 

இப்படி திரும்ப திரும்ப கொடுக்கப்படுவதால் கிடைக்கும் நன்மைகள், அழியாத ஸதக்கத்துன் ஜாரியாவாக நபி பெருமானின் நல்வாக்குப்படி உங்கள் உறவினர்களுக்கு இன்ஷா அல்லாஹ் வல்ல அல்லாஹ் அருளுவான்.


ஆதலால் சகோதர சகோதரிகள் கீழக்கரை பைத்துல்மாலுக்கு தங்கள் முன்னோர்கள் பெயரில் என்டோமெண்ட் நிதி வழங்கி அல்லாஹ்வின் அருட்கொடையை அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு தெரிவித்திருந்தார்.

1 comment: