தேடல் தொடங்கியதே..

Monday 17 June 2013

கீழக்கரையில் வேகமாக பரவி வரும் 'மெட்ராஸ் ஐ' கண் வலி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த விபரங்கள் !

கீழக்கரையில் தற்போது, "மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருந்துக்கடைகளில் ஆன்டிபயாடிக் சொட்டு மருந்து விற்பனை ஜோராக நடந்து வருகிறது. அடினோ வைரஸ் கிருமியினால் பரவும், "மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல், கண்ணீர் வடிதல், கண் சிவப்பாக மாறுதல் போன்ற உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். பலர் இந்நோயால் கறுப்பு கண்ணாடி அணிந்து வலம் வருகின்றனர்.  இந்த நோய், காற்றின் மூலம் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதால், எங்கே நோய் தாக்குமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இது குறித்து கீழக்கரையை சேர்ந்த வேளானூர் அரசு மருத்துவர்.செய்யது ராசிக்தீன் அவர்கள் கூறும் போது "மெட்ராஸ் ஐ'யால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை பார்த்தால், நமக்கும் பரவி விடும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கர்சிப், துண்டு போன்றவற்றை பயன்படுத்தினால் மட்டுமே மற்றவர்களுக்கு, 'மெட்ராஸ் ஐ'பரவும்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சொட்டு மருந்துகளை டாக்டர்களின் ஆலோசனைப்படி மட்டுமே உபயோகிக்க வேண்டும். மருந்துக்கடைகளில் விற்கும் ஏதேனும் சொட்டு மருந்துகளை வாங்கி உபயோகித்தால், கருவிழி பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. 

இந்த பாதிப்பு தொற்றினால்,சிலருக்கு, தொண்டை வறட்சி, சளி பிடிக்கலாம். பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருந்தால் அவர்கள் பள்ளிக்கு அனுப்பாமல், அந்தந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை தருவது நல்லது. இதனால் மற்ற குழந்தைகளுக்கும் பரவுவது தடுக்கப்படும். தினந்தோறும் சுத்தமான நீரில் கண்களை கழுவி வந்தால், "மெட்ராஸ் ஐ' நோயில் இருந்து கண்களை பாதுகாக்கலாம். "மெட்ராஸ் ஐ'யால் பாதிக்கப்பட்டவர்கள் கூலிங்கிளாசை பயன்படுத்தினால், கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். இதன் மூலம் கண்நோய் பாதிப்பில் இருந்து விரைவாக குணமடையலாம்" இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட கீழக்கரை தம்பி நெயனாப் பிள்ளை தெருவை சேர்ந்த ஜமாலுதீன் அவர்கள் கூறும் போது " முன்பெல்லாம் மெட்ராஸ் ஐ என்று சொல்லும் கண் நோய் வந்தால், முறையான சிகிச்சை எடுக்கும் பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் சரியாகி விடும். ஆனால் தற்போது 10 நாள்களுக்கு மேல் ஆகிறது. கண் வழியும் எரிச்சலும் அதிகமாக இருக்கிறது. இரண்டு நாளுக்கு மேல் கண்கள் சிவப்பாக இருந்து தொடர்ந்து கண்ணீர் வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது." என்று கறுப்புக் கண்ணாடி அணித்தவாறு தெரிவித்தார். 

உங்கள் பொது அறிவுக்கு :

’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்து போகும் அழையா விருந்தாளி. ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ’ ‘பிங்க் ஐ’ என செல்லமாக அழைக்கப்படுகிறது.

1918-ம் ஆண்டு இந்த கண்நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அடினோ என்ற வைரஸ் கிருமியால் இந்நோய் உண்டாகிறது.

இது ஒருவகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. கண்களை பாதிக்கும் வைரஸ் கிருமியை சென்னையில் முதன் முதலில் கண்டுபிடித்ததால் மெட்ராஸ்-ஐ எனப் பெயர் வந்தது.

’’கருவிழியை சுற்றியுள்ள வெள்ளை படலத்தின் மீது கண்ணுக்கு தெரியாமல் வைரஸ் கிருமி ஒட்டிக் கொண்டு இருக்கும். கண்கள் அதிகம் சிவந்து காணப்படும். அதிகமாக அழுக்கு வரும். கண் எரிச்சல் உண்டாகும். வலி இருக்கும். கண்கள் கூசும். மற்றவர்களை இது எளிதில் தொற்றிக் கொள்ளும். 

சொட்டு மருந்துகளை போடும்போது கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். 



இந்நோய் வந்தால் கண்ணில் எதிர்ப்பு சக்தி குறையும். முறையான சிகிச்சை பெற்று வந்தால் ஒருவாரத்தில் குணமாகி விடும்.

கண் நோய் (தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ) ஆங்கிலத்தில், “கன்ஜங்டிவிட்டிஸ்’ என்றழைக்கப்படுகிறது. இது, காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால், மக்கள் கவலை கொள்கின்றனர். 

கண் சிவப்பாவது மட்டுமல்லாமல், அரிப்பு, வீக்கமும் ஏற்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு வந்தால், மற்ற அனைவருக்கும், பள்ளியில் ஒரு மாணவருக்கு வந்தால், அனைவருக்கும் தொற்றும் தன்மை கொண்டது இது.

“கூலிங் கிளாஸ்’ அணிவது, நம் கையை கண் அருகில் கொண்டு செல்லாமல் இருக்க மட்டுமே தவிர, இந்த கண்ணாடி தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் எனக் கூற முடியாது.

தொற்று ஏற்பட்டால் செய்ய வேண்டியவை :

* கண்களை உங்கள் கைகளால் தொடாதீர்கள்; அரிக்கிறதே என நினைத்து, சொறியாதீர்கள்.

* அடிக்கடி கையைச் சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.

* தினமும் கைக்குட் டை, டவலை சுத்தம் செய்ய வேண்டும். உங்களுக்கென தனி கைக்குட்டை, டவல் வைத்துக் கொள்ளுங்கள்.

* தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள்.

* கண் மை, லைனர் ஆகியவற்றை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

* கண்ணை சுத்தம் செய்ய, இதமான துணி அல்லது பஞ்சை தண்ணீரில் நனைத்து, கண்ணை மூடி, இமையில் லேசாக அழுத்த வேண்டும். பின், கண்ணை சுற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கண்ணுக்கு பயன்படுத்திய துணியை, அடுத்த கண்ணுக்கு பயன்படுத்தக் கூடாது.

* பேபி ஷாம்பூ ஒரு சொட்டு, தண்ணீர் 10 சொட்டு சேர்த்து கலந்து, அதன் மூலம் கண்ணுக்கு வெளியே உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.

* தொற்று முற்றிலும் நீங்கும் வரை, “கான்டாக்ட் லென்ஸ்’ அணியக் கூடாது.குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், பள்ளியில் மற்ற குழந்தைகளுக்கும் வேகமாகப் பரவி விடுகிறது. எனவே, இந்த நேரத்தில் விடுமுறை எடுத்து, தொற்று முற்றிலும் குணமானதும், பள்ளிக்கு செல்லலாம்.

நீச்சல் குளத்தில் உள்ள குளோரின், உடலுக்கு தேய்க்கும் சோப்பு, துணிக்குப் போடும் சோப்பு ஆகியவற்றாலும் கண்ணில் ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கு, குளிர்ந்த நீரால் கண்ணைக் கழுவினாலே போதும். கண்ணில் தூசி விழுதல், வேறு துகள்கள் விழுதல், இமை முடி கண்ணுக்குள் சென்று விடுதல் ஆகியவற்றால், கண்ணில் உறுத்தல் ஏற்படும். இது போன்ற உபாதைகளை நீங்களாகவே கையாளாமல், கண் மருத்துவ ரிடம் காண்பிப்பது நல்லது.

மெட்ராஸ் ஐ வகைகள்:

வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ என பல வகைகள் இருக்கிறது.

அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

பெருகி வரும் மாசினால் வெகு சுலபமாக நம்மை வந்தடைவது அலர்ஜி. இதனால் கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழியவும் செய்யும்.

வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

இந்த வகை சளிப் பிடித்தல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் ஏற்படுவது. இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இது அரிப்புடன் நீர் வழியும். 

பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

இதில் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐயில் காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் ஏதோ விழுந்ததுப் போன்ற ஒரு உறுத்தல் இருக்கும்.

ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ : 

இந்த வகையில் கண் உறுத்தலும் வலியும் அதிகமிருக்கும். அரிப்போ நீர்/சீழ் வடிதல் இருக்காது.

மெட்ராஸ் ஐ - சிகிச்சை: 

மெட்ராஸ் ஐ பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தைப் பொறுத்து செயற்கை கண்ணீர் (Artificial tears) ஏதேனும் பரிந்துரைப்பார்கள். இது கண்ணுக்கு சற்று இதமளிக்கும்.

மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம். 

கண்ணைத் துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி/கம்ப்யூட்டர் பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களை கூச செய்யாத வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க: 

மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவக் கூடியது என்பதால் இதுப்போல நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் புழங்கும் இடத்திற்கு செல்வதைத் தடுக்கலாம். 

மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராகப் பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை துடைத்துக் கொண்ட கையால் தொட்ட ஏதேனும் ஒன்றை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது. 

அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. மேலும் மெட்ராஸ் ஐ வராவிட்டாலும் நம் கை நேரடியாக கண்ணைத் தொடுவற்கு வழிவிடாமல் கண்ணாடி அணிந்துக் கொள்ளலாம். கையால் கண்ணைத் துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.

No comments:

Post a Comment