தேடல் தொடங்கியதே..

Wednesday 22 May 2013

கீழக்கரை மாணவர்கள் சட்டம் படிக்க ஆசையா ? சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்வது எப்படி ? - 'வீட்டிற்கு ஒரு வக்கீல்' கல்வி வழிகாட்டி !


கீழக்கரை நகரில் இருந்து சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழில் செய்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருக்கிறார்கள். அவர்களுள் ஓரிரு வக்கீல்கள் சிறப்பாக பணியாற்றினாலும் கூட, பலர் இன்னும் ஞாயிற்றுக் கிழமை வக்கீல்களாகவே காலத்தை ஓட்டி வருவது வருத்தத்திற்குரியது. கீழக்கரைவாசிகள் தங்களுக்கு ஏற்படும் சட்ட சிக்கல்களை தீர்க்கவும், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தங்களுக்காக திறம்பட வாதாடவும், நல்ல சட்ட அறிவு நிறைந்த வக்கீல் பெருமக்கள் இல்லாததால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். 



சமீப காலமாக நியாயத்தையும், சத்தியத்தையும் நிலை நாட்ட பாடுபடும், இந்த உன்னதமான வழக்கறிஞர் தொழிலை, தொலைக் காட்சி ஊடகங்களிலும், தரம் கெட்ட சினிமாக்களிலும், மிகக் கேவலமாக சித்தரிப்பது வழக்கமாகி வருகிறது. இதன் தாக்கத்தால் மாணவ மணிகள் சட்டப் படிப்பில் சேரத் தயங்குகின்றனர். நீதி மன்றங்களில் தங்களின் வழக்குகளை நடத்தி வரும் கீழக்கரை சாமானியர்கள் பெரும்பாலும், இராமநாதபுரத்திற்கும் மதுரைக்குமாக, நல்ல வக்கீல்களை தேடித் திரியும் நிலையே தற்போது நிலவுகிறது. அந்த சட்டம் படித்த சத்தியவான்களும், சிறு வழக்குகளை நடத்துவதாக இருந்தாலும் கூட, நீதி மன்ற நடை முறை தெரியாத பாமரர்களிடம் இருந்து கரன்சிகளை கணக்கில்லாமல் கறந்து விடுகின்றனர். 

இதில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும், தேவயில்லாத வழக்குகளில் அப்பாவிகள் சிக்கி தவிப்பதை களைந்தெரியவும், எதிர் வரும் காலங்களில் 'வீட்டிற்கு ஒரு வக்கீல்' இருக்க வேண்டிய கட்டாய சூழல் நிலவி வருகிறது. ஆகவே உள்ளூர் மாணவ மாணவிகள் சட்டப் படிப்பினை கசடறக் கற்று, இந்த  சிறப்பான தொழிலை, கீழக்கரையின் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில் செய்து, நற்பேறு பெற வேண்டுமென கீழை இளையவன் வலை தளம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.

சட்ட படிப்பிற்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தற்போது துவங்கி உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், பி.ஏ., பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்பும், பி.எல்., என்ற மூன்றாண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்பிற்கு, 1,052 இடங்களும், மூன்றாண்டு பி.எல்., சட்ட படிப்பிற்கு, 1,262 இடங்களும் உள்ளன. இப்படிப்புகளில் சேர, பிளஸ் 2 தேர்வில்  45 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விலை, 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பி.ஏ., - பி.எல்., சட்டப் படிப்பில் சேர, பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

சென்னையில் உள்ள சட்ட பள்ளியில் நடத்தப்படும் பி.ஏ., பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில், 120 இடங்களும், பி.காம்.- பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பிற்கு, 60 இடங்களும், பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில், 60 இடங்களும் உள்ளன. 70 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விலை 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்பங்களை தபாலில் பெற ரூ.1100 என்றும் பி.ஏ., பி.எல்., சட்டப்  படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 14.06.2013 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை, "பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் ச ட்ட பல்கலைக்கழகம், சென்னை'' என்ற பெயரில் "டிடி' எடுத்து மாணவர்கள் பெறலாம். ஜூன், 14ம் தேதிக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜூன், 25ம் தேதிக்குள், மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இது தவிர கர்நாடகா மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளிலும் LL.B., பட்டப் படிப்புகளுக்கு அடுத்த மாதம் முதல் விண்ணப்பங்கள் வெளியிடப் படுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. 

இந்தாண்டு முதல் புதிதாக, பி.காம்., பி.எல்., (ஹானர்ஸ்) என்ற, ஐந்தாண்டு பட்டப் படிப்பு அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கிறது. இப்படிப்புக்கு மாணவர்களிடம் அதிகளவில் விண்ணப்பங்கள் வரும் எனவும் பி.ஏ., பி.எல்., படிப்புகளுக்கு, 7,000 விண்ணப்பங்களும், பி.எல்., படிப்புகளுக்கு, 8,000 விண்ணப்பங்களும் இந்தாண்டு வர வாய்ப்பு உள்ளதாகவும்  கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் . 

மேலும் சட்டப் படிப்பு குறித்த தகவலுக்கு www.tndalu.ac.in என்ற இணைய தள முகவரியை சொடுக்கி பார்வையிடலாம். 

No comments:

Post a Comment