தேடல் தொடங்கியதே..

Wednesday 15 May 2013

கீழக்கரையில் களை கட்டும் மாம்பழ விற்பனை - ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள் அவசியம் அறிய வேண்டிய விடயங்கள் !

மாம்பழ சீசன் துவங்கியதை அடுத்து கீழக்கரையில் பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தங்கம் போல ஜொலிக்கும் வண்ணத்தில் இருக்கும் இந்த பழங்களை தெருக்களில் கொண்டு வரும் வியாபாரிகள் கிலோ 75 முதல் 90 ரூபாய் வரை விற்கின்றனர். முக்கனிகளில் முத்தான கனியான இந்த மாம்பழங்களை பார்க்கும் போதே, அதன் தித்திக்கும் சுவையை நினைத்து நாவில் நீர் சுரக்கிறது. விற்பனைக்கு வந்திருக்கும் பல்வேறு வகையான மாம்பழங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பழங்களை வாங்கி செல்கின்றனர்.



தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு போதிய மா விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனால் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் போதிய மழை இல்லாத போதும் இந்த ஆண்டு அதிகம் மா விளைச்சல் ஏற்பட்டுள்ளது.  அதே நேரம் செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் உண்போருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு அதிக வாய்ப்புள்ளது.
இது குறித்து கோகா அஹமது தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர், அஸ்வான் சங்கத்தின் செயலாளர் 'மஸ்தான்' என்கிற அஹமது  இபுறாகீம் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் தற்போது பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. சிறிய கடைக்காரர்களும், கூடைகளில் வைத்து பழம் விற்பவர்களும் மாம் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும் சல்பர், கார்பைடு, பிளானோசிக்ஸ்' உள்ளிட்ட ரசாயன கற்கள், ஆசிட் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிட்டால் குடல் புண், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதோடு, நரம்பு மண்டலத்தை பாதிக்கும், எனவே, மாம்பழங்களை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன், தரமான மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது" என்று தெரிவித்தார். 



இதுகுறித்து குற்றாலம் வல்லம் பகுதியில் இருந்து கீழக்கரைக்கு மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் மசூது அவர்கள் கூறும் போது "இறைவன் அருளால் இந்த ஆண்டு மாம்பழம் சீசன் தொடங்கி அதிகம் பழம் வரத்தொடங்கி உள்ள நிலையில் சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம் பசந்த், குண்டு என்கிற அல்போன்சா, நடுச்சாலை, செந்தூரா, அமர்பாலி உள்பட 10-க்கும் மேற்பட்ட ரக பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது கீழக்கரைக்கு இமாம் பசந்த், அல்போன்சா உள்ளிட்ட  வகை மாம்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறோம். மொத்தம் 60 வகை மாம்பழங்கள் உள்ளது. இதில் 10 ரக பழங்கள் தான் வந்துள்ளது. இந்த மாம்பழ சீசன் இன்னும் 3 மாதத்தற்கு இருக்கும். இன்னும் மற்ற ரக பழங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

கல் வைத்து பழுக்கும் 'விஷ மாம்பழத்தை' கண்டு பிடிப்பது எப்படி ?

செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை பார்த்தவுடன் கண்டறிய முடியாது என்பதால், பொதுமக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமீப காலமாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்கிற செய்தியை நாம் தினப் பத்திரிகைகளில் வாசிப்பதுண்டு. இப்பழத்தை உண்போருக்கு வயிற்றோட்டம், பேதி, கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம் போல, மக்களை கவரும் இந்த மாம்பழங்கள் விஷமானவை. 



மாம்பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கஷ்டமான காரியம்.

கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்களை கண்டு பிடிப்பது கடினமானது. அனுபவத்தின் மூலமே அறிய முடியும். பொதுவாக வெளித் தோற்றமே பழம் போல இருக்கும். உள்ளே பழுத்த தன்மையோ, சுவையோ, மணமோ இராது. எந்த ஒரு பழமும் விளைச்சல் என்ற நிலைக்கு வந்த பின்பே, அதில் சுக்ரோஸ் என்ற இனிப்பு தன்மை வரும். அதன் பின் புகை மூட்டம் போன்றவற்றால் பழுக்க வைப்பதால் பாதிப்பு வராது. ஆனால் காயாக இருக்கும் போதே, அதை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

செயற்கையாக பழுத்த மாம்பழங்களை வெளிப்புற தோற்றம் மூலம் கண்டு பிடிக்க முடியாது. அதிகளவில் பழங்களை வாங்குவோர், பழங்களில் ஒன்றை வெட்டிப் பார்த்து சுவைத்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனெனில் செயற்கையாக பழுத்த பழங்களில் இயற்கையான பழம் போன்ற சுவையோ, மணமோ இருப்பதில்லை. ஆகவே இந்த மாம்பழ சீசனில் மிகுந்த கவனத்துடன் பொதுமக்கள்  மாம்பழங்களை வாங்கிஉண்ண வேண்டும்.


  • Hassan Ali மாம்பழ சீசன் வந்தாலே இந்த பாயை கீழக்கரையில் பார்க்கலாம் கீழக்கரைதான் வந்தவர்களை வாழவைக்கும் அதுனாலத்தான் வருடம் தவறாமல் நம்பிக்கையுடன் கீழக்கரைக்கு போனால் விற்றுவிடலாம் என்று வருகிறார் அவர் நம்பிக்கை வீணாகாது

No comments:

Post a Comment