தேடல் தொடங்கியதே..

Wednesday 24 April 2013

தமிழகமெங்கும் பாஸ்போர்ட் விசாரணைக்கு 'பெண்கள் காவல் நிலையம் செல்லத் தேவை இல்லை' - ஜவாஹிருல்லாஹ் M.L.A கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவு !


கீழக்கரை நகர், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாக இருப்பதால், பெண்கள் வெளி இடங்களுக்கு செல்வது மிகக் குறைவானதே. ஆனால் பாஸ்போர்ட் எடுப்பதற்காக விண்ணப்பிக்கும், அனைத்து இஸ்லாமிய பெண்களும், குழந்தைகளும், விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் அவர்கள் பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர். இந்த காவல் துறையினரின் நடை முறையை மாற்றி அமைக்க, யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா ? என்ற ஆதங்கம்... கீழக்கரை மக்களிடையே வெகு காலமாக இருந்து வந்தது. 

இந் நிலையில் தமிழ்நாடு சட்ட பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கையின் கூட்டம் நேற்று (23.04.2013) நடை பெற்றது. அந்த நிகழ்வில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி, மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர். எம். எச் ஜவாஹிருல்லா அவர்கள் பேசினார்.



 பேராசிரியர் அவர்களின் உரையும் மாண்புமிகு முதலமைச்சரின் பதிலும்

காவல் துறையில் முஸ்லீம்களை கூடுதலாக சேர்ப்பது சம்பந்தமாக :

பேராசிரியர் அவர்கள் : சிறுபான்மையின மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள  இந்த அரசாங்கத்திடம்  மிக முக்கியமான கோரிக்கையை நான் வைக்க விரும்புகிறேன். தமிழகத்தில் 2001 ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி முஸ்லிம்களுடைய மக்கள் தொகை 5.6 சதவிகிதம் என்று சொல்லப்படுகிறது ஆனால் தமிழக காவல் துறையில் முஸ்லிம்கள் 1 சதவிததிற்கும் குறைவாகத் தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை சரிக் கட்டுவதற்கு முஸ்லிம்களுடைய பங்களிப்பு காவல் துறையில் அதிகப்படுத்துவதற்கு இந்த அரசு சிறப்பான முறையிலே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

காவல் துறையினரால் பதியப்பட்ட சிறு வழக்குகளில் சிக்கி இருக்கும் முஸ்லீம் மக்கள், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் இடையூறுகளை களைவது சம்பந்தமாக :

பேராசிரியர் அவர்கள் : தமிழகத்திலே, முஸ்லிம் இளைஞர்கள் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விசாரணைகளை காவல் துறையினுடைய சிறப்புப் பிரிவு மேற்கொள்கின்றது. அதிலே பல இடங்களிலே, பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படுகின்றது. உதாரணமாக, சொல்ல வேண்டுமென்றால் 107 சி.ஆர்.பி.சி. போன்ற வழக்குகள், அது குற்ற வழக்கே இல்லை ஆனால் காவல் ஆய்வாளர் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செய்யக் கூடிய நடவடிக்கையாகும். 

அப்படி 107 சி.ஆர்.பி.சி. இருந்தாலும் கூட அந்த பாஸ்போர்ட் விசாரணை நீடிக்கப்பட்டு பாஸ்போர்ட் கிடைக்காத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதை போல் ஒரு குற்றம் செய்தததாக கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று,விடுதலையானப் பிறகும் கூட அப்படிப்பட்டவர்கள் பாஸ்பார்ட்க்கு விண்ணப்பம் செய்யும் போது கூட,அவர்களுக்கு அந்த விசாரணையிலே தடைகள் ஏற்பட்டு இருக்கக்கூடிய சூழலைப் பார்கின்றோம்.


காவல் நிலையத்திற்கு பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களை அழைப்பது சமபந்தமாக :

இந்தப் பாஸ்பார்ட் விசாரணைக்காக சிறப்பு பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற் கொள்ள வேண்டும். ஆனால், சில மாவட்டங்களிலே, இராமநாதபுரம் மாவட்டம் உட்பட, பெண்கள் உள்பட எல்லோரையும் காவல் நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. இதையும் சீர்படுத்துவதற்கு இந்த அரசு முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

(மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனது பதிலுரையில் இதற்கு பின் வருமாறு பதிலளித்தார்கள்.)

மாண்புமிகு முதல்வர் : மாண்பு மிகு பேரவைத் தலைவர் அவர்களே,முனைவர் ஜவாஹிருல்லா பேசுகின்ற போது பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் கூட காவல் நிலையத்திற்கு வர வழைக்கப்படுகின்றனர் என்று கூறினார்.  சி.ஆர்.பி.சி. சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளை சாட்சியாக விசாரணை செய்யக் கூடாது.காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது. அவர்களை அவர்களது இருப்பிடத்திற்குச் சென்று தான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்கத் தேவையில்லை அவ்வாறு நடை பெற்றிருந்தால் அது விசாரிக்கப்பட்டு, இது போன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் அவர்கள் பதிலளித்தார்.



இது குறித்து துபாயிலிருந்து நம்மிடையே பேசிய, கீழை இளையவன் வாசகர்,கீழக்கரை நடுத் தெருவைச் சேர்ந்த நஜீம் மரைக்கா அவர்கள் கூறும் போது "பல்லாண்டு காலமாக இருந்து வந்த காவல் துறையின் நடை முறையை, மாற்றி அமைக்க சட்ட சபையில் குரல் கொடுத்த பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், கீழக்கரை பொது மக்கள் சார்பாக, நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நாள் வரை பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்  நமதூர் பெண்கள் மிகுந்த சிரமத்துடன், காவல் நிலையம் வரை சென்று வந்தனர். இனி அது போல் செல்லத் தேவையில்லை." என்று மகிழ்ச்சி ததும்ப, உற்சாகக் குரலில் பேசினார். 

கீழை இளையவன் வலை தளம் சார்பாகவும் சட்ட மன்ற உறுப்பினர். பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1 comment:

  1. சி.ஆர்.பி.சி. சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளை சாட்சியாக விசாரணை செய்யக் கூடாது.காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது. அவர்களை அவர்களது இருப்பிடத்திற்குச் சென்று தான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்கத் தேவையில்லை அவ்வாறு நடை பெற்றிருந்தால் அது விசாரிக்கப்பட்டு, இது போன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் - சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர்,

    சி.ஆர்.பி.சி. யின் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத சட்டத்தை காக்கும் காவலர்களின் செயல்பாட்டை என்ன என்று புகழ்வது? இது நாள் வரை இது பற்றி விழிப்புணர்வு இல்லாத சமுதாய அமைப்புகளை என்ன என்று பாராட்டுவது?

    இன்றாவது சட்ட விதி மீறலுக்கு முடிவு கண்ட சட்ட மன்ற மக்கள் பிரதிநிதி சகோதரர் ஜவாஹிருல்லா அவர்கள் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவரே.

    இனியாவது சமுதாய அமைப்புகள் விழிப்புடன் இருந்து முதல்வரின் வாக்குறுதி கடை பிடிக்கப்ப்டுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும்.

    ReplyDelete