தேடல் தொடங்கியதே..

Saturday 17 November 2012

கீழக்கரையில் இடைத்தரகர்கள் இடையூறால் 'இஸ்லாமிய திருமண சான்றிதழ்' பெறுவதில் சிரமம் !


இராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும் இஸ்லாமியர்களின் திருமணத்தை பதிவு செய்வதற்கான மாவட்ட டவுன் காஜி அலுவலகம் கீழக்கரையில் இயங்கி வருகிறது. கீழக்கரையிலிருந்தும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் திருமணத்தை பதிவதற்கும், மணமுறிவு சான்றிதழ்கள் பெறுவதற்கும் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். அதில் திருமண சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் தற்போது வெகுவாக உயர்ந்துள்ளதாகவும், இந்த அலுவலகத்தின் வாசலில் காத்திருக்கும் இடைத்தரகர்களிடம் மாட்டும் பொதுமக்களிடம் இரட்டிப்பாக பணத்தை பெற்று, திருமண சான்றிதழ் விரைந்து வாங்கித் தருவதாகவும் பொது மக்கள்  வருத்தம் தெரிவிக்கின்றனர். 


இது குறித்து சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாகீம் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் இஸ்லாமிய திருமண சான்றிதழ் வேண்டி மாவட்ட தலைமை ஹாஜி இடம் விண்ணபிக்கும் மக்களிடம் இடைத்தரகர்கள் தற்பொழுது 1000 ரூபாய்க்கு மேல் வசூல் செய்கின்றனர். கடந்த மூன்று மாதம் முன்பு வரை திருமண சான்றிதழ் பெறுவதற்கு ரூபாய் 500 ஆக தான் இருந்தது. ஆனால் தற்போது திடீரென கட்டணம் இரட்டிப்பாகி இருக்கிறது. ஆனால் சென்னை தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அலுவலகத்தில் தரும் திருமண சான்றிதழுக்கு எந்த வித கட்டணமும் இல்லை. இங்கு மட்டும் இவ்வளவு அதிகமாக செலவழிக்க வேண்டி இருக்கிறது.

இங்கு சான்றிதழ் இலவசம் என்றால் அலுவலத்தில் இலவசம் என்று தகவல் வைக்க வேண்டும், சான்றிதழுக்கு கட்டணம் என்றால், உண்மையான கட்டணம் எவ்வளவு? திருமண, மண முறிவு சான்றிதழ் போன்றவை பெறுவதற்கு என்னென்ன தகவல்களை விண்ணப்பிப்பவர் இணைக்க வேண்டும் என்பதனை அறிவிப்புப் பலகையாக வைக்க வேண்டும். மேலும் வசூலிக்கும் தொகைக்கு உரிய இரசீது கொடுக்க வேண்டும். இந்த விசயத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பொது மக்களுக்கு சரியான தகவல்களை தந்து, அலைக்கழிப்புகளுக்கு உட்படுத்தாமல் முறைபடுத்த வேண்டும் " என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 


இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி ஜனாப்.சலாஹுத்தீன் ஆலிம் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்ட போது "திருமண சான்றிதழ் வழங்குவதற்காக ரூபாய்.1000 வசூலிப்பது உண்மை தான். இந்த பணிகளை செய்வதற்காக, அரசு தனியாக எந்த பொருளாதாரத்தையும் வழங்கவில்லை. பொதுமக்களிடமிருந்து பெறும்  இந்த தொகை கூட, அலுவலக செலவுகளுக்காகவும், நிர்வாக செலவுகளுக்காகவும், தபால் செலவுக்காகவும் தான் வசூலிக்கப்படுகிறது. மேலும் இது சம்பந்தமான உண்மையான தகவல்களுக்கு இடைத்தரகர்களை அணுகாமல், நேரடியாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெறலாம்."என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment