தேடல் தொடங்கியதே..

Tuesday 4 September 2012

கீழக்கரையில் மின்சாரப் பிரச்சனையை தீர்க்க எம்.எல்.ஏ முயற்சி - அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தல் !

கீழக்கரை நகரில் தொடர்ந்து மின்சார விநியோகத்தில் பிரச்சனை எழுந்த வண்ணம் உள்ளது. தமிழகமெங்கும் காற்றாலை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கீழக்கரையில் அறிவிக்கப்படாத மின் வெட்டினையும் தாண்டி நடு நிசி இரவுகளில், டிரான்ஸ்பார்மர்களில் ஏற்படும் திடீர் கோளாறுகளால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மின்சார  வாரிய ஊழியர்களால் உடனுக்குடன் கோளாறுகள் பழுது நீக்கப்படாததால் மாதத்தின் பாதி நாள்கள் உறங்காத இரவுகளாகவே மாறிப் போனது.
FILE PHOTO
கீழக்கரையின் பல்வேறு பொது நல அமைப்பினர்களும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று (03.09.2012) இரவு 10 மணி அளவில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் திரு.இரா.விஸ்வாதன் அவர்களை அமைச்சருடைய இல்லத்தில் சந்தித்து கீழக்கரை மின்சாரப் பிரச்சனை தொடர்பாக சில கோரிக்கை கடிதங்களை வழங்கினார்.

அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதாவது:

1. கீழக்கரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தும் அலுவலகம் ஊருக்கு வெளியே அமைந்திருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக ஊருக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை இருந்தது. இப்பிரச்சனையால் பொது மக்கள் மிகவும் சிரமம் அடைந்த காரணத்தால் கீழக்கரை பேருந்து நிலையத்தில் அருகில் மின்சாரக் கட்டணம் செலுத்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.

2. அதேபோல் கீழ்க்கரையில் 10 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஒன்றை நிறுவி இதுவரை மின் இணைப்பு தாராமல் உள்ளது.

3. மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க சரியான தொலைபேசி எண்ணும் இல்லாமல் உள்ளது.

எனவே செயல்பாடாமல் உள்ள மின்கட்டண அலுவலகத்தை உடனே செயல்படுத்தவும், புதிய மின்மாற்றியை இயக்கவும், மின்தடை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்னை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கமாறு கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முன்னதாக 01.09.2012 சனிக்கிழமை இராமநாதபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு மாபெரும் கோரிக்கை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 30 தீர்மானங்களில், கீழக்கரை நகரின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.




கீழக்கரைக்கு தனி தாலுக்கா அந்தஸ்து 
 
அரசு அறிவிப்போடு முடங்கிப்போன கீழக்கரையை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை உருவாக்கும் ஆணையை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் பாதாள சாக்கடை
 
இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து மேற்கண்ட இரு நகராட்சிகளையும் தூய்மை பெற துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

கடல் அட்டை மீதான தடையை நீக்குக
 
கடல் அட்டை மீதான மத்திய அரசின் தடை அர்த்தமற்றது என இப்பொதுக்கூட்டம் கருதுகிறது. எனவே பல்லாயிரம் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை இழக்கச் செய்யும் கடல் அட்டை மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வாக்களித்தது போல் கடல் அட்டை மீதான தடையை நீக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. சங்கு, சிப்பி மீதான தடையும் நீக்கப்பட வேண்டுமென இப் பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது" இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

No comments:

Post a Comment