தேடல் தொடங்கியதே..

Wednesday 25 July 2012

கீழக்கரையில் வழங்கப்படும் சுவைமிகு 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் !

தமிழகத்தில் பல பகுதிகளில் சிறப்பாக தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சியினை அருந்தியே பெரும்பாலானோர் நோன்பு திறக்கின்றனர்.  நோன்பு நேரத்தில் சோர்வு வந்தாலும், நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறக்கும் போது அது அனைத்து சக்தியையும் தந்து விடுகின்றது.  தமிழ்நாட்டு முஸ்லிம் மக்கள் மற்ற நாடுகளில் வாழ்ந்தாலும் கூட  நோன்பு  கஞ்சி தாங்களாகவே தங்கள் வீட்டில்  தயாரித்தாவது  அதனைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர்.  



ஒவ்வொரு ஊரிலும் நோன்பு கஞ்சிகளின் செய்முறையும் சுவையும் வேறுபடலாம். ஆனால் கீழக்கரைபள்ளிவாசல்கள் மற்றும் பொது நல சங்கங்கள் சார்பில் சமைக்கப்படும் நோன்பு கஞ்சிகளின் தனிச் சுவையால் மவுசு அதிகமாகவே இருக்கிறது. கீழ‌க்க‌ரையில் உள்ள பெரும்பாலான பள்ளி வாசல்களில் ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் மாலைநேர‌ தொழுகைக்குப் பின்  பொதுமக்களுக்கு நோன்பு க‌ஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டும் மணம் கமழும், அதீத சுவையுடன் கூடிய பள்ளிவாசல் நோன்பு கஞ்சியை சிறுவ‌ர்க‌ள் முத‌ல் பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ரை ஆர்வ‌த்துட‌ம் வ‌ரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர். இதனால் கீழக்கரையில் நோன்பு திறப்பதற்கு மிகப் பிரதான உணவாக, நோன்பு கஞ்சி இருக்கிறது. கீழக்கரையில் செய்யப்படும் நோன்பு கஞ்சியில் வெந்தயம், பாசிப்பருப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவை சேர்வதால், உடல் களைப்பை போக்கி, பலத்தை கொடுக்கிறது. 


அதிரை நிரூபர் குழுவினரின் ஏற்பாட்டில் CHEF. பாரூக் அவர்கள் விளக்கும் நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி என்ற காணொளி (வீடியோ) காட்சிகளை காண பின் வரும் லிங்கை சொடுக்கி காணலாம்.

நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி ? காணொளி (வீடியோ) காட்சி 
                               http://www.youtube.com/watch?v=5wxkFQ8MhtI


இந்த வருடம் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளி வாசல்களுக்கு 3800 மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டிருந்தார். இதன் எதிரொலியாக பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, செயல் வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடைந்ததுடன், 3800 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment