தேடல் தொடங்கியதே..

Saturday 9 June 2012

கீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க சீன தேசத்திலிருந்து 'போதி தர்மரா'வருவார்? - டெங்கு பீதியில் உலவும் மக்களுக்கான தகவல் !

நம் கீழக்கரை நகரில் தற்போது எங்கு நோக்கினும் டெங்கு காய்ச்சல் பற்றிய பயம் பெருமளவில் காணப்படுகிறது. நமது நகரிலுள்ள 114  தெருக்களில், பாரபட்சமின்றி தெருவுக்கு இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் வீதம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இராமநாதபுரத்திலோ அல்லது மதுரையிலோ உள்ள தனியார் மருத்துவமனைகளில் தங்கி, ஆயிரக்கணக்கில் செலவழித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 


நமது ஊர் மக்கள் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பது கண் கூடாக தெரிந்தாலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்லாததால், டெங்கு குறித்த புள்ளி விபரங்கள் அரசுக்கு சரியாக கிடைக்காதது பெரும் வருத்தமளிக்கிறது. இருப்பினும் நம் தமிழக அரசு, நகராட்சி நிர்வாகத்தினரையும், சுகாதாரத் துறையினரையும் முடுக்கி விட்டு, போர்க்கால அடிப்படையில் அனைத்து ஆக்க நடவடிக்கைகளையும் எடுத்து வருவது மன ஆறுதலை அளிப்பதாக உள்ளது. 


குறிப்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டெங்கு கொசுக்களை முற்றிலும் ஒழிக்க புகை மருந்துகள் அடிப்பது, நீர் நிலைத் தொட்டிகளை சரியான முறையில் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது. இது தவிர, நமதூரின் பொது நல அமைப்புகளும் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அராங்கமும், ஆட்சியாளர்களும், சமூக ஆர்வலர்களும் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும், எவ்வளவு அரும்பாடு பட்டாலும், பொது மக்களின் மேலான ஒத்துழைப்பு இல்லாத வரை, இந்த கொலை வெறி டெங்கு கொசுக்களின் அட்டகாசம் ஒழியப் போவதில்லை. டெங்கு காய்ச்சலுக்கு இன்னும் முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சீன தேசத்திற்கு கிடைத்த போதி தர்மன் போல, நம் நகரத்திற்கும் ஒருவர் வரும் வரை காத்திருக்க போகின்றோமா?

(FILE PHOTO)
நிஜத்தில் அப்படியொரு கதாபாத்திரம் நிச்சயம் வரப் போவதில்லை.. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனும், தன்னையும், தன் சுற்றுப் புறத்தையும் பேணும் போது அவரும் உண்மையில் கதாநாயகர் தான்... நீங்களும் நம் நகரை அச்சுறுத்தும் டெங்கு கொசுக்களை ஒழிக்க முயற்சிகள் மேற்கொண்டு, நகரம் போற்றும் நாயகனாக மாற பின் வரும் செயல்களை முயற்ச்சிக்கலாமே...

  • வீட்டிற்குள் குளிர்பான பாட்டில்கள், பீப்பாய்கள், ஜக்குகள், பானைகள், வாளிகள், பூந்தொட்டிகள்(பிரிட்ஜ்), தாவரத் தொட்டிகள், நீர்தேக்கத் தொட்டிகள், பள்ளங்கள், பாட்டில்கள், டப்பாக்கள், டயர்கள், கூரையில் உள்ள நீர் வடி பள்ளங்கள், குளிப்பதனப் பெட்டியிலிருந்து சொட்டும் தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள், சிமெண்ட் தொட்டிகள், சிமெண்ட் கலசங்கள், மூங்கில் குடில்கள் (புட்டிகள்) தேங்காய் ஓடுகள், மரத்திலுள்ள துணைக் குழிகள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள / சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்தி நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும.
  •  

    • வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    • அனைத்து நேரங்களிலும் கொசு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களை கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    • தங்கள் பகுதிகளுக்கு, டெங்கு கொசுக்களை ஒழிக்க, இது வரை புகை மருந்து அடிக்கப் படாமல் இருந்தால், அந்தந்த  வார்டு கவுன்சிலர்களை அணுகி, விபரங்களை தெரிவிக்கவும்.

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்திகள் :



    யா அல்லாஹ் ! என்னையும், எங்கள் குடும்பத்தாரையும், தெருவாசிகளையும், நகர மக்களையும் டெங்கு போன்ற கொடிய உயிர் கொல்லி நோய்களிடமிருந்து காப்பாற்றுவாயாக... எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக... ஆமீன் 

    1 comment: