தேடல் தொடங்கியதே..

Wednesday 18 January 2012

கீழக்கரையில் 'ஓப்பன் பார்' ஆகி போன புதிய பாலம் - 'குடி'மகன்கள் குதூகலம் !

இரவு பத்து மணிக்கு புதிய கடல் பாலத்தின் காட்சி

நம் கீழக்கரை கடற்கரையில் புதிய (ஜெட்டி) பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் அங்கு எல்லா நேரங்களிலும் ஏராளமான மக்கள் வருகை தந்து தங்களுடைய கவலைகளையும் மறந்து, கடலின் அழகை ரசித்து செல்கின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வருகை அங்கு அதிகளவில் உள்ளது. மாலை நேரங்களில், பக்கத்து ஊரில் உள்ளவர்கள் கூட இங்கு குடும்பத்துடன் வந்து, பாலத்தில் அமர்ந்து, ஊர் கதை பேசி மகிழ்ச்சியாக நேரம் கழிக்கிறார்கள். 

நாமும் நம் கீழக்கரையில் பொழுது போக்குவதற்கு ஒரு ரம்மியமான சூழல் அமைந்துவிட்டதை எண்ணி சந்தோசப்படும் வேலையில், புதிய பாலத்தில் நடைபெறும் ஒழுக்கச் சீர்கேடுகள் நம் கீழக்கரை இளைய சமுதாயத்தை தவறான பாதைக்கு இழுத்து சென்று விடுமோ? என்று அஞ்சத் தோன்றுகிறது.

மாலை நேரங்களில் பாலத்தில் சிறுவர்கள்

இது குறித்து கடல் பாலத்திற்கு தினமும் நடைபயிற்சிக்காக வருகை தரும் அஹமது இபுறாகீம்  அவர்கள் கூறியதாவது, "பல ஆண்டுகள் இடைவிடாத முயற்சிகள் எடுத்து, இந்த சிறப்பான கடல் பாலத்திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்ட அனைவருக்கும், கீழக்கரை அனைத்து மக்கள் சார்பாக என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதே நேரம், இங்கு நடைபெறும் பல விசயங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக இருக்கிறது. பாலத்தில் லேசாக இருட்ட ஆரம்பித்து விட்டாலே,  குடியும்,  கும்மாளமும் அமர்க்களப்படுகிறது.



குடித்து விட்டு சச்சரவுகள் செய்வதும், பாட்டில்களை கடலில் தூக்கி வீசுவதும், போட்டு உடைப்பதும், பின்னர் குடிமகன்கள் போதையின் உச்சத்தை தொட்டதில் 'நண்பேண்டா...' என கட்டி உருள்வதுமாய் ரகளைகள் களை கட்டுகிறது. இது போன்ற இழிசெயல்கள் புதிய பாலத்தில் நடைபெறுவதை உடனடியாக சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த குடிமகன்களின் கோமாளி விளையாட்டுகள், விபரீதத்தில் தான் முடியும்", என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

மங்கிய ஒளியில் 'மினி பார்'ராக புதிய பாலம்

இது குறித்து கீழக்கரை புது கிழக்குதேருவை சேர்ந்த லெப்பை தம்பி அவர்கள் கூறும் போது, "இங்கு குடித்து, கும்மாளம் அடிப்பவர்கள் பெரும்பாலும் நம் வாலிப பசங்கலாகத் தான் இருக்கிறார்கள் எனபது வேதனையிலும் வேதனை. பாலத்தில் மாலை 6 மணிக்கு மேல் வாலிபர்கள் கூட்டம் குவிய துவங்குகிறது. இருள் சூழ்ந்து இரவு நேரம் வந்து விட்டால் திறந்த வெளி மதுபான விடுதியாக மாறி விடுகிறது. இருட்டிய பிறகு இன்னும் சில ஆசாமிகள்,  எதற்கு இங்கு வருகிறார்கள்? என்பது தெரியவில்லை. இப்போது இங்கு நிறுவப்பட்டிருக்கும் இருக்கும் மங்கிய ஒளி தரும் இரண்டு சூரிய சக்தி விளக்குகளும் 'நிஜ பார்' ரையே குடிமகன்களுக்காக  கொண்டு வந்திருக்கிறது என்றே கூற முடிகிறது.

இரவு 10 மணிக்கு மேலும் பாலத்தில் 'குடி' கொண்டிருக்கும் வாலிபர்கள்

இருட்டிய பிறகு இங்கு வருகை தரும் பெரியவர்களிடம் இந்த சின்ன குடிமகன்கள், அவர்களின் முதிர்ந்த வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்பது வழக்கமாகி இருக்கிறது. ஆகவே பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பாலத்திற்கு செல்வது நல்லதல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இவர்களை தடுக்க முடியாத பட்சத்தில் 6 மணிக்குமேல் பாலத்திற்கு  'குடி மகன்களுக்கு மட்டும்' அனுமதி என்று அறிவிப்பு பலகை வைத்தால் நல்லது", என்று தன் மன உளைச்சலை பொரிந்து தள்ளினார்.

கும்மிருட்டிலும் கடலை ரசிக்கும் நபர்கள்


நாம் காலையிலும், மாலையிலும் கடலின் அழகை, சில்லென்ற காற்றை, அலைகளின் ஆர்ப்பரிப்பை, மீனவ நண்பனின் துடிப்பான உழைப்பை,  படகுகளின் அமைதியான வருகையை, பறவைகளின் உல்லாச கீதங்களை, சின்ன.. சின்ன.. மீன்களின் துள்ளலை ரசிக்க நமக்கு கிடைத்த இந்த அற்புதமான, அழகான, நம் புதிய பாலம் இரவு நேரங்களில் ஒழுக்க சீர்கேடுகளின் முக்கிய தளமாக மாறி விடக் கூடாது. 

மாலை நேரங்களில் கடல் காற்றின் ரசிகர்கள்



நாமும் மாற விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். கீழக்கரை இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை முன்னிட்டு பெற்றோர்களும், இரவு நேரங்களில் பாலத்திற்கு செல்லும் தங்கள் பிள்ளைகள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து இந்த ஒழுங்கீனர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் இரு பக்கமும், தடுப்பு சுவர் இல்லாததால், பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை, பாலத்திற்கு அழைத்து செல்லும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 

குழந்தைகள் கவனம் !

சூடான 'அச்சு முறுக்கு' வியாபாரம்

இது போன்ற இழிசெயலர்களைப் பற்றி கீழக்கரை காவல் நிலைய தொலை பேசி எண்ணில் (04567-241272) திரு.இளங்கோவன் அவர்கள் (காவல் துறை ஆய்வாளர்) மற்றும் திரு.இராமநாதன் அவர்கள் (சார்பு ஆய்வாளர்) ஆகியோரை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம்  -


களை கட்டும் 'அச்சார் ஊறுகாய்' வியாபாரம்

'ஹாயாக' ஒரு குளிர் பானக் கடை

No comments:

Post a Comment