தேடல் தொடங்கியதே..

Saturday 31 December 2011

நிரந்தர ஆணையரில்லாத கீழக்கரை நகராட்சி - அலைகழிக்கப்படும் பொது மக்கள்

கீழக்கரை நகராட்சியில் நகராட்சி ஆணையர் இட மாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும், இன்னும் அந்த பணியிடம்  தமிழக அரசால் நிரப்பப்படவில்லை. கூடுதல் பொறுப்பை ஏற்றிருக்கும், தற்காலிக ஆணையரால் அனைத்து பணிகளையும் சரி வர செய்ய முடியாமல் போகிறது.

  பூட்டியே கிடக்கும் நகராட்சி ஆணையர் அறை


இது குறித்து லெப்பை தெருவை சேர்ந்த முஹம்மது ஜமீல் அவர்கள் கூறுகையில், "கையொப்பத்திற்காக காத்திருக்கும் பைல்கள் அனைத்தும் இராமநாதபுரம் எடுத்து செல்ல வேண்டியுள்ளதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.  சுகாதார ஆய்வாளரும் பணியிட மாற்றம் வாங்கி சென்று விட்டதால், அந்த பணியிடமும் நம் நகராட்சியில் காலியாக இருக்கிறது. நகராட்சிக்கு மிக முக்கிய பொறுப்புகளான இந்த இரண்டு பணியிடங்களும் காலியாக இருப்பதால் கட்டிட வரைபட ஒப்புதல் பெறுவது, வரி மாறுதல் செய்வது, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது மிகுந்த கால தாமதம் ஆகிறது. இதனால் நகராட்சியின் பெரும்பாலான பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது ", என்று தன் வருத்தத்தை தெரிவித்தார்.


திறக்கப்படாத சுகாதார ஆய்வாளர் அறை

இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழகத் தலைவர் தமீமுதீன் அவர்கள் கூறும் போது, வரும்  புது  வருடத்தின் முதல் மனுவாக, மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் நாளில் நமது கீழக்கரை நகருக்கு நிரந்தர ஆணையரையும், சுகாதார ஆய்வாளரையும் நியமிக்க, கீழக்கரை அனைத்து மக்கள் சார்பாக, கோரிக்கை மனு கொடுக்க இருக்கிறோம். நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்  கவனத்திற்கும் இந்த கோரிக்கையை கொண்டு செல்வோம். அவர்கள் உடனடியாக மனுவினை  பரிசீலனை  செய்து தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு விரைவில் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.", என்று தெரிவித்தார்.

நம் நகராட்சிக்கு, ஒரு சிறப்பான நற்குணம் பொருந்திய, நேர்மையான நிரந்தர நகராட்சி ஆணையரையும், சுகாதார ஆய்வாளரையும் , தமிழக அரசு பணி நியமனம் செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுவோம்.
 

No comments:

Post a Comment